ஆரோக்கியமான கொழுப்பு அவசியம்

கொலஸ்ட்ரால் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் அவற்றில் உடலுக்கு நன்மை சேர்க்கும் விஷயங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. நம் உடலில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் கொலஸ்ட்ரால் எப்படி தீங்கு விளைவிக்கும் என்ற கேள்வியை எழுப்புகிறார், டெல்லியை சேர்ந்த பிரபல ஊட்டச்சத்து நிபுணர் பாருல் மல்ஹோத்ரா பாஹல்.

Update: 2022-03-20 22:43 GMT
‘‘கொலஸ்ட்ரால் என்பது கொழுப்பு போன்ற பொருள். அது இயற்கையாக நம் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது செல் சவ்வுகளுக்கு இன்றியமையாத பொருளாகும். மேலும், கொழுப்பு உணவுகளை செரிமானம் செய்வதற்கு தேவைப்படும் ஹார்மோன்கள், வைட்டமின் டி மற்றும் பித்தநீர் ஆகியவற்றை உற்பத்தி செய்ய கொலஸ்ட்ரால் அவசியம்.

அதிக கொழுப்புள்ள ஆரோக்கியமான உணவுகளை உண்பது உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கொலஸ்ட்ரால் நிறைந்த சில உணவுகளில் முக்கியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன’’ என்றும் சொல்கிறார்.

உயர் கொழுப்பு உள்ளடங்கிய ஆரோக்கியமான சில உணவுகள் பற்றி பார்ப்போம்.

முட்டை: இதில் தினசரி உடலுக்கு தேவையான கொழுப்பில் 60 சதவீதம் உள்ளது. மேலும் நிறைவுற்ற கொழுப்பு 8 சதவீதம் மட்டுமே உள்ளது. அதிக புரதம், குறைந்த கலோரி, வைட்டமின் பி, இரும்பு உள்ளிட்ட நோயை எதிர்த்து போராடும் ஊட்டச்சத்துக்கள் முட்டையில் நிரம்பியுள்ளன. எனவே தினமும் உணவில் முட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மீன்: ‘ஷெல் பிஷ்’ எனப்படும் இறால் போன்ற மீன் வகைகளில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது. ஆனால் நிறைவுற்ற கொழுப்பு குறைவாகவே உள்ளது. புரதம், வைட்டமின் பி, செலினியம், இரும்பு, துத்தநாகம் போன்றவையும் நிறைந்துள்ளன. எனவே இறால், மட்டி மீன், நண்டு போன்ற மீன் வகைகளை உட்கொள்வது ஆரோக்கியமானது.

பாலாடைக்கட்டிகள்: பல்வேறு வகையான பாலாடைக்கட்டிகள் மாறுபட்ட ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளன. கால்சியம், புரதம், வைட்டமின் ஏ மற்றும் பி போன்றவற்றை போதுமான அளவில் வழங்குகின்றன. அதே வேளையில் அதிக கலோரிகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்பை கொண்டிருப்பதால், குறைந்த அளவு பாலாடைக்கட்டி சாப்பிடுவது நல்லது.

யோகர்ட்: இது முழு கொழுப்பை உள்ளடக்கிய தயிராக கருதப்படுகிறது. இது புரதம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்ட கொழுப்பு நிறைந்த உணவாகும். மேலும் இது புளிக்கவைக்கப்பட்ட உணவாக இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதில் நிறைவுற்ற கொழுப்புகள் கொஞ்சம் அதிகமாக இருப்பதால் கட்டுப்பாடோடு உட்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான உயர் கொழுப்பு கொண்ட உணவுகள் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்து நன்மைகள் அவற்றில் உள்ள கொழுப்பின் உள்ளடக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே, ஆரோக்கியமான உயர் கொலஸ்ட்ரால் உணவுகளை மிதமான அளவில், உட்கொள்ளலாம். எனினும் அவற்றை உட்கொள்ளும் முன்பு மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

மேலும் செய்திகள்