8 உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி 1.3 சதவீதம் வளர்ச்சி

எட்டு உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி, கடந்த டிசம்பர் மாதத்தில் 1.3 சதவீதம் வளர்ச்சி கண்டு இருக்கிறது.

Update: 2020-02-01 11:31 GMT
புதுடெல்லி

எட்டு உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி, கடந்த டிசம்பர் மாதத்தில் 1.3 சதவீதம் வளர்ச்சி கண்டு இருக்கிறது.

40 சதவீத பங்கு

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருள்கள், உரம், உருக்கு, சிமெண்டு மற்றும் மின்சாரம் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக ஆதாரமாக விளங்கும் 8 உள்கட்டமைப்பு துறைகளாகும். தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை கணக்கிடுவதில் இந்த துறைகளின் பங்கு 40 சதவீதமாக இருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதத்தில் (ஏப்ரல்) இத்துறைகளின் உற்பத்தி 2.6 சதவீத வளர்ச்சி கண்டு இருந்தது. மே மாதத்தில் வளர்ச்சி 5.1 சதவீதமாக இருந்தது. ஜூன் மாதத்தில் 0.2 சதவீத வளர்ச்சி மட்டும் இருந்தது. ஜூலையில் 2.1 சதவீத முன்னேற்றம் காணப்பட்டது. ஆகஸ்டில் 0.5 சதவீதம் குறைந்தது. செப்டம்பர் மாதத்தில் 5.2 சதவீதம் சரிந்தது. அக்டோபரில் 5.8 சதவீதம் சரிவடைந்தது. நவம்பரில் அது 1.5 சதவீதம் குறைந்தது.

இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் 8 உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி 1.3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அந்த மாதத்தில் மின் உற்பத்தி 1.6 சதவீதம் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி 7.4 சதவீதம் சரிந்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி 9.2 சதவீதம் சரிந்து இருக்கிறது. அதே சமயம் நிலக்கரி உற்பத்தி 6.1 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. உரம் உற்பத்தி 10.2 சதவீதம் உயர்ந்துள்ளது. சிமெண்டு உற்பத்தி 5.5 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தி 3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

எட்டு துறைகளுக்கான குறியீட்டு எண்ணை கணக்கிடுவதில் நிலக்கரியின் பங்கு 10.33 சதவீதமாக உள்ளது. கச்சா எண்ணெயின் பங்கு 8.98 சதவீதமாகவும், இயற்கை எரிவாயுவின் பங்கு 6.88 சதவீதமாகவும் உள்ளது. பெட்ரோலிய பொருள்கள் மற்றும் உரத்தின் பங்கு முறையே 28.04 சதவீதம் மற்றும் 2.63 சதவீதமாக இருக்கிறது. உருக்கு, சிமெண்டு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் பங்கு முறையே 17.92 சதவீதம், 5.37 சதவீதம் மற்றும் 19.85 சதவீதமாக உள்ளது.

தொழில்துறை உற்பத்தி

டிசம்பர் மாதத்தில் 8 துறைகளின் உற்பத்தி 1.3 சதவீதம் மட்டுமே உயர்ந்து இருப்பதால் அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தியில் ஓரளவு முன்னேற்றத்தையே எதிர்பார்க்க இயலும் என நிபுணர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 1.8 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மேலும் செய்திகள்