பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார், சிந்து - ‘மேலும் பதக்கங்கள் வெல்வேன்’ என்று பேட்டி

உலக பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்று தாயகம் திரும்பிய சிந்து பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Update: 2019-08-27 09:22 GMT
புதுடெல்லி,

சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட்டில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை துவம்சம் செய்து முதல்முறையாக தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். உலக பேட்மிண்டனில் மகுடம் சூடிய முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்த பி.வி.சிந்து நேற்று அதிகாலை தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விளையாட்டு உலகில் இந்தியாவை தலைநிமிர வைத்துள்ள ‘தங்க மங்கை’ பி.வி.சிந்து, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். தான் வென்ற பதக்கத்தை பிரதமரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

‘இந்தியாவின் பெருமையே’ என்று சிந்துவுக்கு புகழாரம் சூட்டியுள்ள பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தங்கப்பதக்கத்தை வென்று வந்து பல சிறப்புகளை சேர்த்த உலக சாம்பியன் சிந்துவை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரது எதிர்கால முயற்சிகளும் மிகச்சிறப்பாக அமைய வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டார். மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூவையும் சிந்து சந்தித்தார். அவரது சாதனையை பாராட்டி ரூ.10 லட்சத்திற்கான காசோலையை கிரண் ரிஜிஜூ வழங்கினார்.

முன்னதாக 24 வயதான சிந்து நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த வெற்றிக்காகத்தான் நீண்ட காலம் காத்திருந்தேன். அதை அடைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். பதக்கம் அணிவிப்பு நிகழ்ச்சியின் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். நமது தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது எனது கண்கள் குளமாகின. எனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு தருணம் அதுவாகும். உண்மையிலேயே இந்தியன் என்பதில் மிகவும் பெருமை அடைகிறேன். ஆனால் வெற்றியை நான் பெரிய அளவில் கொண்டாடவில்லை. அதற்கு எனக்கு போதிய நேரம் இல்லை.

உங்களது (ரசிகர்கள்) ஆசியால் தான் சாதித்து இங்கு வந்து நிற்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. இதே போல் எனது பயிற்சியாளர்கள் கோபிசந்த், கிம் ஜி ஹியூன் ஆகியோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எனது சாதனையில் அவரது பங்களிப்பும் மகத்தானது. எனது ஆட்டத்தில் அவர்கள் சில மாற்றங்களை செய்தனர். இன்னும் கடினமாக உழைத்து நிறைய பதக்கங்களை வெல்வேன். இவ்வாறு சிந்து கூறினார்.

மேலும் செய்திகள்