பலத்த மழை காரணமாக ரெயில் சேவை பாதிப்பு; பயணிகள் பரிதவிப்பு - மும்பை-புனே ரெயில்கள் இன்று ரத்து

பலத்த மழை காரணமாக மும்பையில் இருந்து புறநகர் செல்லும் ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது. மும்பை- புனே ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.

Update: 2023-07-19 19:45 GMT

மும்பை, 

பலத்த மழை காரணமாக மும்பையில் இருந்து புறநகர் செல்லும் ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது. மும்பை- புனே ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.

ரெட் அலர்ட்

ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட பால்கர், ராய்காட், புனே ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. மழையின் காரணமாக ராய்காட் மாவட்டம் வஷிஷ்டி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கொங்கன் வழித்தடத்தில் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக கொச்சுவேலி-இந்தூர் எக்ஸ்பிரஸ் சிப்லுன் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

இன்று ரெயில்கள் ரத்து

இதைத்தவிர மத்திய ரெயில்வே வழித்தடத்தில் மும்பை-புனே இடையே இயக்கப்படும் தினசரி சேவைகளான இந்திராயணி, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இன்று (வியாழக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது. தானே மாவட்டம் கல்யாண், முர்பாட், கசாரா, கர்ஜத் ஆகிய இடங்களில் கனமழை பெய்ததால் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியது. அம்பர்நாத்-பத்லாப்பூர் இடையே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதைத்தவிர கல்யாண்-கசாரா இடையே மதியம் 2.40 மணி அளவில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறு காரணமாக மின்சார ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது.

பயணிகள் கூட்டம் அலைமோதியது

தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரையில் பணி நடந்ததால் அலுவலகம் முடிந்து வீடு செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மும்பை சி.எஸ்.எம்.டியில் இருந்து கசாரா, கர்ஜத் செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பிளாட்பாரத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் தொலைதூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. பயணிகள் தங்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல தானே, கல்யாண் ஆகிய இடங்களில் இருந்து கூடுதலாக மராட்டிய அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் சில மணி நேரம் இடைவெளியில் ஓரிரு மின்சார ரெயில் சேவைகள் மும்பையில் இருந்து தாமதமாக இயக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்