நிலச்சரிவு ஏற்பட்ட மலைப்பகுதியை வேடிக்கை பார்க்க வரும் மக்களால் மீட்பு பணி பாதிப்பு

ராய்காட் மாவட்டம் இர்சல்வாடியில் ஏற்பட்ட நிலச்சரிவை வேடிக்கை பார்க்க வரும் மக்களால் மீட்பு பணியில் பாதிப்பு

Update: 2023-07-22 19:30 GMT

மும்பை, 

ராய்காட் மாவட்டம் இர்சல்வாடியில் ஏற்பட்ட நிலச்சரிவால் 27 பேர் உயிரிழந்து உள்ளனர். 81 மாயமாகி உள்ளனர். எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பலத்த மழைக்கு இடையேயும் மண்சாிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட கிராமத்தை பார்க்க அதிகளவில் மக்கள் செல்வது மீட்பு பணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பலர் நிலச்சரிவு நடந்த பகுதிக்கு வந்து செல்பி எடுக்கின்றனர். பாறைகளில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கின்றனர். சம்பவம் நடந்த 2 நாளில் அங்கு சுமார் 15 ஆயிரம் பேர் சென்றதாக கூறப்படுகிறது. எனவே நேற்று முன்தினம் முதல் கிராமத்துக்குள் செல்ல பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பேரிடரை காண மக்கள் வருவது மிகவும் மோசமானது என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் சைத்ராலி கேரகர் கூறுகையில், " நிலச்சரிவை பார்வையிட வரும் பொது மக்களால் மீட்பு பணி பாதிக்கப்படுகிறது. இதுவரை சுமார் 15 ஆயிரம் பேர் இங்கு வந்து உள்ளனர்" என்றார்.

ராய்காட் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதுல் சென்டே கூறியதாவது:-

நிலச்சரிவை காண அதிகளவில் மக்கள் வந்ததை அடுத்து, இர்சல்வாடி கிராமத்துக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கிராமத்துக்கு தொடர்பு இல்லாதவர்கள் அங்கு செல்வது கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் உதவி செய்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் அதிகளவில் வருகின்றனர். எனினும் இனிவரும் காலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சோதனை பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்