மும்பையில் திடீர் நிலச்சரிவு - 15 வாகனங்கள் புதைந்தன

மும்பையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் 15 வாகனங்கள் மண்ணில் புதைந்தன.

Update: 2023-07-05 19:00 GMT

மும்பை, 

மும்பையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் 15 வாகனங்கள் மண்ணில் புதைந்தன.

நிலச்சரிவு

மும்பையில் பருவமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை சுன்னாப்பட்டி ராகுல்நகர் பகுதியில் கட்டுமான நிறுவனம் சார்பில் புதிய கட்டிடம் அமைக்க சுமார் 25 அடி ஆழமுள்ள பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக நேற்று காலை 9 மணி அளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அதையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 8 முதல் 10 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 5 கார்கள் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தன.

வீடியோ வைரல்

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மாநகராட்சியினர் அங்கு விரைந்து சென்றனர். பாதுகாப்பு நடவடிக்கையாக அங்கு யாரும் செல்லாத வகையில் அப்பகுதியை சுற்றி தடுப்பு வேலி அமைத்தனர். மும்பையில் பெய்து வரும் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அடங்கிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த வாரம் மகா தானே மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், தற்போது சுன்னாப்பட்டியில் நிலச்சரிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்