விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.49 லட்சம் இழப்பீடு

விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.49 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-07-17 17:05 GMT

மும்பை, 

விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.49 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

விபத்தில் பலி

மும்பையை சேர்ந்தவர் நிதின் பரப்(வயது52). போக்குவரத்து போலீஸ்காரர். இவர், கடந்த 2016-ம் ஆண்டு இரவு 8 மணி அளவில் மாட்டுங்கா ஆர்.ஏ.கே. சாலையில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக பிபாட் அஷ் என்பவர் சிக்னலை மீறி மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார். இதனை கண்ட போலீஸ்காரர் நிதின் பரப் அவரை வழிமறிக்க முயன்றார். அப்போது, மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நிதின் பரப்பை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.

ரூ.49 லட்சம் இழப்பீடு

இதனால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு விபத்து ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் உரிமையாளர் பிபாட் அஷ்சிடம் முறையிட்டனர். இதற்கு அவர் தர மறுத்ததால் சம்பவம் குறித்து மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் முறையிட்டனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.பி. முன்டே முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. விசாரணையின் போது பிபாட் அஷ்சை தீர்ப்பாயத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதனை தொடர்ந்து தீர்ப்பு வழங்கிய தீர்ப்பாயம், பலியான போலீஸ்காரர் நிதின் பரப் மாதந்தோறும் ரூ.35 ஆயிரம் வருமானம் பெற்று வந்து உள்ளார். இதனால் அவர் உயிரிழந்த 2016-ம் ஆண்டு முதல் வருமானத்தின் அடிப்படையில் 7 சதவீத வட்டியுடன் சேர்ந்து காப்பீடு நிறுவனம் மற்றும் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் இணைந்து ரூ.49 லட்சம் அவரது குடுபத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்