கல்வி வாசனையே இல்லாத பழங்குடியின குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்- அவுரங்காபாத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

கல்வி வாசனையே இல்லாத பழங்குடியின குழந்தைகளுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகிறார்கள்.

Update: 2022-09-19 18:45 GMT

அவுரங்காபாத்,

கல்வி வாசனையே இல்லாத பழங்குடியின குழந்தைகளுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகிறார்கள்.

கொரோனாவால் கல்வி

நாட்டையே வீட்டிற்குள் கட்டிப்போட்ட கொரோனா எனும் பெருந்தொற்று, பலரின் உயிரை பறித்தது. அதேபோல கண்ணுக்கு தெரியாத அந்த நோய் தொற்று சத்தமின்றி பலரின் பொருளாதாரத்தையும் சீர்குலைத்துவிட்டது.

ஆனால் அதேநேரம் பலரின் மனிதாபிமானத்தையும், உதவும் எண்ணத்தையும் இந்த தொற்று காலத்தில் பார்க்க முடிந்தது.

இப்படி பல ஆண்டுகளாக கல்வியின் வாசனையே இல்லாத ஒரு பழங்குடியின மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்க்க இந்த கொரோனா தொற்று உதவி இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?.

ஆமாம் அப்படி ஒரு துவக்கம் அவுரங்காபாத்தில் தொடங்கி உள்ளது.

வாழ்வாதாரம் பாதிப்பு

அவுரங்காபாத்தில் உள்ள தேவகிரி கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள மலிவாடா பகுதியில் கோண்ட் என்ற பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு ஏறக்குறைய 150 பேர் வசித்து வந்த நிலையில், அவர்கள் மரங்களில் வேர்களில் கிடைக்கும் மூலிகைகளை விற்று தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றி வந்தனர். காலபோக்கில் இந்த தொழிலுக்கு வரவேற்பு குறைந்துவிட்டது.

இதனால் கூலி வேலை செய்து தங்கள் பிழைப்பை நடத்தி வந்தனர். ஆனால் கொரோனா அவர்களின் அந்த தொழிலையும் பறித்துக்கொண்டது.

வாழ்வாதாரமே தோல்வி அடைந்த நிலையில் அவர்கள் நேர்மையான அணுகுமுறை ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மூலம் அவர்களின் குழந்தைகளுக்கு படிப்பை கொண்டுவந்துள்ளது.

இதுகுறித்து அவர்களுக்கு உதவி செய்தவர்களின் ஒருவரான டாக்டர் ஸ்ரீரங் தேஷ்பாண்டே கூறியதாவது:-

மராத்தி தெரியாது

கொரோனா தொற்றுநோயின் முதல் அலையின்போது சில டாக்டர்கள், ஆசிரியர்கள் கொண்ட குழுவாக இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வந்தோம். அப்போது தான் மலிவாடா பகுதியை அடைந்தோம்.

இந்த பழங்குடியினர் மிகவும் நேர்மையானவர்கள், சில நாட்களுக்கு முன்பு தான் ரேஷன் மற்றும் உணவு பொட்டலங்கள் தங்களுக்கு கிடைத்தது என்ற காரணத்தால் நாங்கள் கொண்டுவந்த பொருட்களை வாங்க மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் தான் அங்குள்ள பழங்குடியினரின் குழந்தைகளுக்கு மராத்தி எழுதவும், படிக்கவும் தெரியாது என்பது எங்களுக்கு தெரியவந்தது.

எனவே எங்களுடன் பணிபுரியும் ஓய்வுபெற்ற 3 ஆசிரியர்களை இந்த குழந்தைகளுக்கு வாரத்திற்கு 2 முறை அவர்களின் இடத்திற்கே சென்று பாடம் கற்பிக்க நியமித்தோம்.

இது அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சுய சுகாதாரம்

இதேபோல அவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர் உஜ்வாலா நிகல்ஜே கூறியதாவது:-

இந்த குழந்தைகளுக்கு பள்ளியின் அடிப்படை செயல்பாடு கூட தெரியவில்லை. அவர்களால் ஒரு வரிசையில் கூட நிற்க முடியவில்லை.

எனவே அவர்களுக்கு சுய சுகாதாரத்தை கற்பிப்பதில் இருந்தே நாங்கள் வேலை செய்ய வேண்டி இருந்தது. அவர்களை புத்தகங்களுக்கு நெருக்கமாக கொண்டுவர 2 மாத காலம் ஆனது.

இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு ஆசிரியர் கூறுகையில், "முதலில் பழங்குடியின குழந்தைகளுக்கு உணவு பொட்டலங்களை கொடுத்து, அவர்களுடன் பழகி நல்ல பிணைப்பை உருவாக்கினோம். பின்னர் படிப்படியாக குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை அறிமுகப்படுத்தினோம். படிப்பு மட்டும் இன்றி அவர்களின் மற்ற திறமைகளை ஊக்குவிக்க விளையாட்டு மைதானத்தையும் உருவாக்கி உள்ளோம்" என்றார்.

படிப்பு கிடைக்காமல் தவித்து வந்த அந்த பழங்குடியின மக்களின் அடுத்த தலைமுறை பொது நீரோட்டத்தில் கலக்க இவர்களின் முன்முயற்சி வித்திட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்