கடற்கரைகளில் ஒதுங்கிய 250 கிலோ போதைப்பொருட்கள் மீட்பு; ரத்னகிரி மாவட்டத்தில் பரபரப்பு

ரத்னகிரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடந்த 6 நாட்களில் 250 கிலோ போதைப்பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன.

Update: 2023-08-21 19:45 GMT

மும்பை, 

ரத்னகிரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடந்த 6 நாட்களில் 250 கிலோ போதைப்பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன.

பொட்டலங்கள்

ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக போதைப்பொருட்கள் அடங்கிய பொட்டலங்கள் கரை ஒதுங்கி வருகின்றன. குறிப்பாக இந்த மாவட்டத்தில் உள்ள கார்டே, லத்கர், கெல்சி, கோல்தாரே, முருட், புரோண்டி மற்றும் போரியா கடற்கரை மற்றும் தபோல் கழிமுகம் ஆகிய இடங்களில் இருந்து போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. முதலில் மாவட்டத்தில் உள்ள கார்டே கடற்கரை பகுதியில் கடந்த 14-ந் தேதி தபோலி சுங்க அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் மிதந்து கொண்டிருந்த 10 பொட்டலங்கள் அவர்களிடம் சிக்கியது. சோதனையில் அது ஆசிஸ் போதைப்பொருள் என கண்டறியப்பட்டது. 12 கிலோ கொண்ட அந்த பொட்டலங்கள் மீட்கப்பட்டன.

250 கிலோ போதைப்பொருள்

அதைத்தொடர்ந்து 15-ந் தேதி கார்டே மற்றும் லத்கர் கடற்கரைகளில் இதேபோன்ற 35 கிலோ போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அடுத்தடுத்த நாட்களில் கெல்சி கடற்கரையில் இருந்த 25 கிலோவும், கோல்தாரேயில் இருந்து 13 கிலோவும், முரட் கடற்கரையில் 14 கிலோவும், புரோண்டி மற்றும் தபோல் கழிமுகத்திற்கு இடையே 101 கிலோவும், போரியா கடற்கரையில் இருந்து 22 கிலோவும் கைப்பற்றப்பட்டன. கடந்த 14-ந் தேதி முதல் 19-ந் தேதி வரையிலான 6 நாட்களில் 7 கடற்கரை பகுதியில் இருந்து 250 கிலோவுக்கு அதிகமான கடத்தல் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து கடத்தி செல்லப்பட்ட இந்த போதைப்பொருட்கள் கப்பலில் இருந்து தவறி விழுந்தோ அல்லது தூக்கி வீசப்பட்டோ கரை ஒதுங்கி இருக்கலாம் என சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தபோலி சுங்கத்துறை உதவி கமிஷனர் ஸ்ரீகாந்த் குடல்கர் கூறியதாவது:-

தேடுதல் பணி

கடந்த திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை 250 கிலோவுக்கு அதிகமான போதைப்பொருட்களை மீட்டுள்ளோம். எங்கள் தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கடற்கரையோரத்தில் வசிக்கும் மக்களிடம் போதைப்பொருள் அடங்கிய பைகளை பார்த்தால் எங்களுக்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளோம். கடற்கரையில் இதுபோன்ற போதைப்பொருட்களை யாராவது மறைத்து வைத்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்