செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் கடத்தல் நாடகமாடிய மும்பை சிறுவன் - பெங்களூருவில் போலீசார் மீட்டனர்

கடத்தப்பட்டதாக நாடகம் ஆடிய சிறுவனை பெங்களூருவில் போலீசார் மீட்டனர்.

Update: 2023-06-23 20:00 GMT

மும்பை, 

கடத்தப்பட்டதாக நாடகம் ஆடிய சிறுவனை பெங்களூருவில் போலீசார் மீட்டனர்.

காணாமல் போன சிறுவன்

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த 2 மாதத்துக்கு முன்பு மும்பைக்கு வந்து தந்தையுடன் வசித்து வந்தான். சிறுவனின் தந்தை தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 12-ந் தேதி காலை 9.30 மணி அளவில் வீட்டைவிட்டு வெளியே சென்ற சிறுவன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த தந்தை பல இடங்களில் மகனை தேடி அலைந்தார். சிறுவன் எங்கும் கிடைக்காததால் இது பற்றி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் சிறுவனை தேடி வந்தனர். இதற்கிடையில் கடந்த 19-ந்தேதி அதிகாலை 2.45 மணி அளவில் 'வாட்ஸ்அப்'பில் சிறுவன் பேசிய ஆடியோ ஒன்று தந்தைக்கு வந்தது.

மீட்பு

இதில் சிறுவன் தான் கடத்தப்பட்டு உள்ளதாகவும், நான் வசமாக சிக்கியுள்ளதால் என்னை தேட வேண்டாம் என்றும் கூறி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் சிறுவனை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். முதல்கட்டமாக சிறுவனின் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் செல்போன் பயன்படுத்துவதை கண்டித்ததால், பெற்றோரிடம் சண்டையிட்டு வந்ததும், இதனால் வீட்டை விட்டு பெங்களூரு செல்ல இருப்பதாக நண்பர்களிடம் கூறியதும் தெரியவந்தது. மேலும் அவரின் செல்போன் சிக்னலும் சிறுவன் பெங்களூருவில் இருப்பதை உறுதி செய்தது. இதையடுத்து போலீசார் பெங்களூரு சென்று சிறுவனை கண்டுபிடித்து மீட்டு மும்பை அழைத்து வந்து காப்பகத்தில் ஒப்படைத்தனர். பெற்றோர் கண்டித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர்களை ஏமாற்ற அவன் கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்