சட்டசபை மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது - 27 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை

சட்டசபை மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. இதில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த 27 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை.

Update: 2023-07-17 19:45 GMT

மும்பை, 

சட்டசபை மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. இதில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த 27 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை.

சட்டசபை தொடங்கியது

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் உள்பட 9 பேர் சமீபத்தில் ஆளும் பா.ஜனதா கூட்டணி அரசின் மந்திரி சபையில் இணைந்தனர். அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், 8 பேர் மந்திரிகளாகவும் பதவியேற்றனர். பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்ததற்கு சரத்பவார் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்டது. இந்த பரபரப்புக்கு மத்தியில் மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

தேசியவாத காங்கிரசின் 27 எம்.எல்.ஏ.க்கள்

இதில் 53 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 25 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கலந்துகொண்டனர். நாவப் மாலிக் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார். மற்ற 27 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை. சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் மந்திரிகள், அஜித்பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்தனர். அதன்படி துணை முதல்-மந்திரி அஜித்பவார், மந்திரிகள் சகன்புஜ்பால், திலீப் வால்சே பாட்டீல், ஹசன் முஷ்ரிப், அதிதி தட்காரே, சஞ்சய் பன்சோடே, தனஞ்செய் முண்டே, அனில் பாட்டீல் மற்றும் தர்மாராவ் ஆர்தம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பாபன்ராவ் ஷிண்டே, இந்திரனில் நாயக், பிரகாஷ் சோலங்கே, கிரண் லாகமேட், சுனில் செல்கே, சரோஜ் அகிரே ஆகியோர் ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்திருந்தனர்.

சரத்பவார் அணி

சரத்பவார் அணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயந்த் பாட்டீல், பாலாசாகேப் பாட்டீல், பிரஜக்த் தன்புரே, சுனில் புசாரே, மான்சிங் பவார், சுமன் பாட்டீல், ரோகித் பவார், ராஜேஷ் தோபே, அசோக் பவார் மற்றும் அனில்தேஷ்முக் ஆகியோர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தனர். ஆனால் அஜித்பவார் அணியை ஆதரித்து ஆளும் கட்சி வரிசையில் அமர்வதா? அல்லது சரத்பவார் அணியை ஆதரித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதா? என்ற குழப்பத்தில் 27 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சபாநாயகருக்கு கடிதம்

முன்னதாக சரத்பவார் அணியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா ஜிதேந்திர அவாத், சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேகருக்கு நேற்று முன்தினம் எழுதிய கடிதத்தில், " ஆளும் கட்சியில் இணைந்து பதவியேற்ற துணை முதல்-மந்திரி அஜித்பவார் உள்பட 9 மந்திரிகளை தவிர மற்றவர்களுக்கு தனியாக இருக்கை ஒதுக்க வேண்டும். தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர விரும்புகிறோம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

-----------

Tags:    

மேலும் செய்திகள்