மெட்ரோ ரெயில் திட்டத்தால் மும்பையில் போக்குவரத்து நெரிசல் குறையும்- ஏக்நாத் ஷிண்டே பேச்சு

மெட்ரோ ரெயில் திட்டத்தால் மும்பையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

Update: 2022-08-30 14:44 GMT

மும்பை,

மெட்ரோ ரெயில் திட்டத்தால் மும்பையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

சோதனை ஓட்டம் தொடக்கம்

மும்பையில் கொலபா- பாந்திரா - சீப்ஸ் இடையே 3-வது மெட்ரோ திட்டப்பணிகள் நடந்து வருகிறது. 33.5 கி.மீ. நீளத்துக்கு அமையும் இந்த திட்டம் முழுக்க சுரங்க பாதையில் அமைகிறது.

இந்த திட்டத்திற்கான சோதனை ஓட்டத்தை நேற்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். சோதனை ஓட்டத்தின்போது புதிய மெட்ரோ ரெயில்கள் ஆரேகாலனியில் இருந்து மரோல் நாக்கா ஜங்ஷன் வரை 3 கி.மீ. தூரத்திற்கு இயக்கப்படும்.

சோதனை ஓட்டத்தை தொடங்கி வைக்கும் முன் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் இணைந்து மெட்ரோ ரெயிலை பார்வையிட்டனர்.

போக்குவரத்து நெரிசல்

இந்தநிலையில் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்த பிறகு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது:-

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை தீர்க்கப்படும். மாநிலத்துக்கு பிரச்சினையாக இருந்த பல தடைகள் நீக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் திட்டத்தால் மின்சார ரெயில்களின் சுமை குறையும். சாலைகளில் கார்களின் எண்ணிக்கை குறையும்.

இதனால் சுற்றுச்சூழல் மாசு குறையும். இதேபோல இந்த திட்டத்தால் அரசியல் மாசும் தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மும்பையின் புதிய 'லைப் லைன்'

இதேபோல துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-

மெட்ரோ 3-வது திட்ட சோதனை ஓட்டம் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. இந்த திட்டப்பணிகள் முழுமையாக முடிந்தால் இது மும்பையின் புதிய உயிர்நாடியாக (லைப் லைன்) மாறும். மெட்ரோ ரெயில் 3-வது தடத்தில் மெட்ரோ ரெயில் சோதனை வெற்றிகரமாக முடிந்தது. மெட்ரோ திட்டத்திற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் தினந்தோறும் 17 லட்சம் பேர் பயணம் செய்வார்கள். மேலும் 7 லட்சம் வாகனங்கள் சாலையில் இருந்து காணாமல் போகும். கண்டிப்பாக இது சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக இருக்கும்.

தற்போது மெட்ரோ ரெயில் ஓடுவதை யாரும் தடுக்க முடியாது என நினைக்கிறேன். அதற்கான சிக்னலை நாங்கள் கொடுத்து உள்ளோம்.

தடைகள் நீக்கம்

ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றவுடன் மெட்ரோ ரெயில் திட்ட தடைகளை நீக்கினார். 50 மெட்ரோ திட்டப்பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிய வேண்டும். ஆனால் தடைகள் காரணமாக பணிகள் தாமதமாகி உள்ளது. 2023 டிசம்பரில் 50 சதவீத பணிகள் முடியும். மீதமுள்ள 50 சதவீத பணிகள் அதன்பிறகு உடனடியாக முடிக்கப்படும்.

ஏக்நாத் ஷிண்டே காஞ்சூர்மார்க்கில் இருந்து ஆரேகாலனிக்கு மெட்ரோ பணிமனையை மாற்றவில்லை எனில் கூடுதலாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் கோடி வரை செலவாகி இருக்கும். இது கண்டிப்பாக மும்பைவாசிகளுக்கு சுமையாகி இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்