ரூ.15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட ஜார்கண்ட் மாவோயிஸ்டு தலைவன் நாலச்சோப்ராவில் கைது

ரூ.15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட ஜார்கண்டை சேர்ந்த மாேவாயிஸ்டு தலைவன் நாலச்சோப்ராவில் கைது செய்யப்பட்டார். காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற வந்தவர் மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிக்கினார்.

Update: 2022-09-18 14:51 GMT

வசாய்,

ரூ.15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட ஜார்கண்டை சேர்ந்த மாேவாயிஸ்டு தலைவன் நாலச்சோப்ராவில் கைது செய்யப்பட்டார். காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற வந்தவர் மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிக்கினார்.

ரூ.15 லட்சம் சன்மானம்

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியை சோ்ந்தவர் மாவோயிஸ்டு இயக்கத்தலைவர் தீபக் யாதவ் என்ற காரு குலாஸ் யாதவ் (வயது45). இவர் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தின் ஜார்கண்ட் மாநில பிராந்திய கமிட்டி உறுப்பினர் ஆவார். 2004-ம் ஆண்டு முதல் மாவோயிஸ்டு இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் இவரை ஜார்கண்ட் மாநில போலீசார் தேடி வந்தனர். மேலும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள இவரை பிடிக்க தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.15 லட்சம் சன்மானமும் அறிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் காரு குலாஸ் யாதவுக்கு இடது காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அந்த காயத்துக்காக கடந்த 2 மாதங்களாக பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா பகுதியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருவதாக மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதிகாலையில் கைது

இதையடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிகாலை மாவோயிஸ்டு தலைவர் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்த நாலச்சோப்ரா குடிசைப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த மாவோயிஸ்டு தலைவர் காரு குலாஸ் யாதவை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஜார்கண்ட் மாநில போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணைக்கு பிறகு காரு குலர் யாதவ் ஜார்கண்ட் மாநில போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.

நாட்டில் சத்தீஸ்கர், மராட்டியம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் தடைசெய்யப்பட்ட நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இவர்களை ஒடுக்க மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்