மராட்டிய மலைக் கிராமத்தில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு - 86 பேர் மாயமானதால் உறவினர்கள் சோகம்

மராட்டிய மலைக்கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் 6 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து உள்ளது. 86 பேர் மாயமானதால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Update: 2023-07-21 19:15 GMT


மும்பை, 

மராட்டிய மலைக்கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் 6 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து உள்ளது. 86 பேர் மாயமானதால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

மண்ணில் புதைந்த வீடுகள்

மராட்டியத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில் மும்பையில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள ராய்காட் மாவட்டம் காலாப்பூர் தாலுகாவில் இயற்கை எழில் கொஞ்சும் இர்சல்வாடி மலைக் கிராமத்தில் பலத்த மழையால் கடந்த புதன்கிழமை இரவு 11 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து உருண்டு வேகமாக வந்த பாறைகளும், மண் குவியலும் மலைச்சரிவில் அமைந்து இருந்த குடிசைகள் மீது விழுந்தது. இந்த துயர சம்பவத்தில் சுமார் 17 வீடுகளில் தூங்கி கொண்டு இருந்த மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனர். 40-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன. தகவல் அறிந்து மும்பை, புனே, நவிமும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு தொடர்ந்து பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

இதில் நேற்று முன்தினம் மாலை வரை 16 பேர் மண்குவியலில் இருந்து பிணமாக மீட்கப்பட்டனர். 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவு அபாயம் இருந்ததால் மீட்பு பணி அன்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் மீட்பு பணி தொடங்கியது. அப்போது மேலும் 6 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். இதனால் நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்தது. பலியானவர்கள் பெண்கள், ஆண்கள் தலா 9 பேர் மற்றும் 4 குழந்தைகள் ஆவர்.

86 பேர் மாயம்

நிலச்சரிவு பாதிப்புக்கு உள்ளான இர்சல்வாடி கிராமத்தின் மக்கள் தொகை 229 பேர் என கூறப்படுகிறது. இதில் வேலை உள்ளிட்ட இதர விஷயங்களுக்காக வெளியூர் சென்றவர்கள் மற்றும் தங்கி படிக்க சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இவர்கள் உள்பட 111 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் 10 பேர் காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்ற 86 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் அதிகாரிகளின் தொடர்பு எல்லையில் இல்லை. எனவே அவர்கள் நிலச்சரிவில் புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அவர்களது உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

பலத்த மழையால் மீட்பு பணி நிறுத்தம்

இதற்கிடையே பலத்த மழை காரணமாக மாலை 6 மணியளவில் மீட்பு பணி நிறுத்தப்பட்டதாகவும், இன்று (சனிக்கிழமை) காலை மீண்டும் மீட்பு பணி தொடரும் என்றும் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இர்சல்வாடி கிராமம் மலையேற்ற பயிற்சிக்காக அதிக பேர் வரும் இர்சல்காட் கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. மலையேற்ற பயிற்சிக்கு வருபவர்களுக்கு தேவையான உணவு, தின்பண்டங்கள் போன்றவற்றை விற்று தான் இந்த கிராம மக்கள் பிழைப்பு நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதே ராய்காட் மாவட்டத்தில் உள்ள மகாட் தாலுகா தலியே கிராமத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் 87 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்