சரத்பவாருக்கு எதிராக அவதூறு வழக்கில் மாணவரை ஜாமீனில் விட ஐகோர்ட்டு மறுப்பு

சரத்பவாருக்கு எதிராக முகநூலில் அவதூறு பரப்பிய மாணவரை உடனடியாக ஜாமீனில் விட ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

Update: 2022-06-06 17:58 GMT

மும்பை, 

சரத்பவாருக்கு எதிராக முகநூலில் அவதூறு பரப்பிய மாணவரை உடனடியாக ஜாமீனில் விட ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

கல்லூரி மாணவர் கைது

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக நாசிக்கை சேர்ந்த பார்மசி கல்லூரி மாணவர் நிகில் பாம்ரே (வயது22) கடந்த மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் மாணவரின் வக்கீல் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மாணவருக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

மேலும் மாணவரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு இருந்தார்.

ஜாமீன் மறுப்பு

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஷிண்டே, ஜாதவ் அடங்கிய அமர்வு முன் நடந்தது. விசாரணையின் போது ஐகோர்ட்டு, "எல்லா குடிமகனுக்கும் அடிப்படை உரிமை உள்ளது. ஆனால் அவை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. யாருக்கும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க உரிமையில்லை. உரிமை இருக்கிறது என்பதற்காக அவர்கள் அதை கட்டுப்பாடு இன்றி பயன்படுத்தலாம் என்று அர்த்தம் இல்லை" என கூறியது.

மேலும் ஐகோர்ட்டு மாணவர் மீதான வழக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதேபோல மாணவர் மனு மீதான முதல் விசாரணையின் போதே ஜாமீனில் விடுவிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மனு மீதான விசாரணை வருகிற 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்