கோலாப்பூரில் ஆற்று வெள்ளத்தின் நடுவே மரத்தில் சிக்கி தவித்த விவசாயி; 13 மணி நேரத்துக்கு பிறகு மீட்பு

கோலாப்பூரில் பாலத்தில் இருந்து தவறி விழுந்து ஆற்று வெள்ளத்தின் நடுவே மரத்தில் சிக்கி தவித்த விவசாயியை 13 மணி நேரத்திற்கு பிறகு போலீசார் மீட்டனர்.

Update: 2023-07-28 19:15 GMT

கோலாப்பூர், 

கோலாப்பூரில் பாலத்தில் இருந்து தவறி விழுந்து ஆற்று வெள்ளத்தின் நடுவே மரத்தில் சிக்கி தவித்த விவசாயியை 13 மணி நேரத்திற்கு பிறகு போலீசார் மீட்டனர்.

வெள்ளப்பெருக்கு

கோலாப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக அங்குள்ள பஞ்சகங்கா, வர்ணா உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தநிலையில் சாங்கிலி மாவட்டம் ஷிராலாவில் உள்ள லகேவாடி கிராமத்தில் வசிக்கும் பஜ்ரங் காம்கர்(வயது50) என்ற விவசாயி ஆர்ப்பரித்து ஓடும் வர்ணா ஆற்று வெள்ளத்தை பார்க்கும் ஆர்வத்தில் முன்தினம் இரவு 9 மணி அளவில் அங்குள்ள பாலத்திற்கு சென்றார். அங்கிருந்து அவர் ஆற்றுநீரை பார்த்துகொண்டு இருந்தபோது திடீரென கால் இடறி ஆற்றுக்குள் விழுந்தார். வேகமான நீரோட்டம் காரணமாக அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

மீட்பு பணி

இந்த நிலையில் நேற்று காலை பஜ்ரங் காம்கர் ஆற்றின் நடுவில் உள்ள மரத்தை பிடித்தவாறு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் பார்த்தனர். உடனடியாக இதுகுறித்து உள்ளூர் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அந்த நபரை மீட்க கோலாப்பூர் பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு காலை 10.30 மணி அளவில் பஜ்ரங் காம்கரை பத்திரமாக மீட்டனர். மேலும் அவருக்கு மருத்துவ உதவியும் வழங்கப்பட்டது. இந்தநிலையில் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ராதாநகரி அணையின் 5 மதகுகள் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பஞ்ச கங்கா ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்