ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலியானவரின் பெற்றோருக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு; ஐகோர்ட்டு உத்தரவு

ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலியானவரின் பெற்றோருக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-09-05 19:15 GMT

மும்பை, 

ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலியானவரின் பெற்றோருக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தீர்ப்பாயம் மறுப்பு

பால்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் அல்பேஷ். இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி பயந்தரில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு மின்சார ரெயிலில் பயணம் செய்தார். நைகாவ்-வசாய் இடையே வந்தபோது கூட்டம் மிகுதி காரணமாக ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலியானார். இதனால் பாதிக்கப்பட்ட அவரது பெற்றோர் இழப்பீடு கேட்டு ரெயில்வே தீர்ப்பாயத்தில் முறையிட்டனர். அங்கு நடந்த விசாரணையின் போது எந்த ரெயிலில் இருந்து கீழே விழுந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை, மேலும் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி யாரும் இல்லை என ரெயில்வே சார்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து அல்பேஷ்சின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க முடியாது என கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதி தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

ரூ.8 லட்சம் இழப்பீடு

இருப்பினும் பெற்றோர் ரெயில்வே தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு செய்தனர். மேலும் பெற்றோரின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை சமர்பித்து இருந்தனர். இதனை சரிபார்த்த போது பலியானவர் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த வசாய் என்பதற்கு பதிலாக ரத்னகிரி மாவட்டம் விர்சாய் என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்ததை நீதிபதிகள் கண்டறிந்தனர். இதனால் ரெயில்வே தீர்ப்பாயம் முறையான விசாரணை நடத்தாமல் தவறு செய்ததை நீதிபதிகள் சுட்டி காட்டினர். மேலும் ரெயில்வே தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட்டு, விபத்தில் பலியான அல்பேஷ்சின் பெற்றோருக்கு ரெயில்வே வாரியம் ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்