ஆப்பிரிக்க பயணி விழுங்கி கடத்தி வந்த ரூ.5 கோடி போதைப்பொருள் - 10 நாள் சிகிச்சை அளித்து மீட்பு

ஆப்பிரிக்க பயணி ஒருவர் விழுங்கி கடத்தி வந்த ரூ.5 கோடி ஹெராயினை 10 நாள் சிகிச்சைக்கு பிறகு போலீசார் மீட்டனர்.

Update: 2023-07-01 19:15 GMT

மும்பை, 

ஆப்பிரிக்க பயணி ஒருவர் விழுங்கி கடத்தி வந்த ரூ.5 கோடி ஹெராயினை 10 நாள் சிகிச்சைக்கு பிறகு போலீசார் மீட்டனர்.

மருத்துவ சிகிச்சை

மும்பை சர்வதேச விமான நிலையம் வழியாக போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக கடந்த மாதம் 21-ந்தேதி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் சோதனை போட்டனர். அப்போது மேற்கு ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஒருவரிடம் நடத்திய சோதனையில் அவர் ஹெராயினை 43 கேப்சூல்களில் அடைத்து அதை விழுங்கி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.5 கோடி ஹெராயின் பறிமுதல்

இதனால் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தியதுடன், வயிற்றில் உள்ள கேப்சூலை வெளியே எடுக்க அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனர். கோர்ட்டு அனுமதி அளித்த நிலையில் போதைப்பொருள் கடத்தி வந்த ஆசாமியை ஜே.ஜே ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு கடந்த மாதம் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் 10 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு டாக்டர்கள் அவர் விழுங்கி இருந்த 43 கேப்சூல்களை வயிற்றில் இருந்து வெளியே எடுத்தனர். அந்த கேப்சூல்களில் இருந்து 504 கிராம் எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மதிப்பு ரூ.5 கோடி ஆகும். மேலும் இதனை கடத்திவந்தவர் மீது போதைப்பொருள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதன்பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்