வெளிநாட்டு கரன்சியை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பணம் பறித்த 4 வங்கதேசத்தினர் கைது

வெளிநாட்டு கரன்சியை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பணம் பறித்த 4 வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்தனர்

Update: 2023-10-11 19:15 GMT

பால்கர், 

பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியை சேர்ந்த 64 வயது முதியவரை சம்பவத்தன்று 4 பேர் அணுகினர். அவர்கள் தங்களிடம் அதிக அளவில் வெளிநாட்டு பணம் இருப்பதாகவும், அதன் மதிப்பை விட குறைந்த விலைக்கு தருவதாகவும் முதியவரிடம் ஆசை வார்த்தை கூறி மூளை சலவை செய்தனர். அவர்கள் பேசியதை உண்மை என நம்பிய முதியவர் அவர்களிடம் ரூ.4 லட்சத்தை கொடுத்துள்ளார். இதற்கு பதிலாக அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கரன்சியை போன்ற வெற்று காகிதங்களை கொடுத்து முதியவரை ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இந்தநிலையில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முதியவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த மோசடியில் வங்கதேசத்தை சேர்ந்த 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். பிடிபட்டவர்களில் 2 பெண்களும் அடங்குவர். இவர்கள் 4 பேரும் முறையான ஆவணங்கள் எதுவும் இன்றி இந்தியாவில் வசித்து வந்தது தெரியவந்தது. மேலும் இந்த கும்பல் இதே பாணியில் மும்பை, தானே பகுதிகளில் பலரை ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 500 மதிப்புள்ள திர்ஹாம் கரன்சியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்