கட்சிரோலி, மேல்காட் கிராம பகுதியை சேர்ந்த 16 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி.

கட்சிரோலி, மேல்காட் கிராம பகுதியை சேர்ந்த 16 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர்.

Update: 2023-06-15 20:15 GMT

மும்பை,

கட்சிரோலி, மேல்காட் கிராம பகுதியை சேர்ந்த 16 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர்.

16 மாணவர்கள் வெற்றி

இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் இந்திய அளவில் தமிழக மாணவர் முதலிடம் பிடித்தார். முதல் 10 இடங்களை 4 பேர் தமிழக மாணவர்கள் பிடித்தனர். இதேபோல கிராமப்புற மாணவர்கள், அரசு பள்ளிகளில் படித்தவர்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த கட்சிரோலி, அமராவதி மாவட்டத்தில் உள்ள மேல்காட் கிராமப்பகுதியை சேர்ந்த 16 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள் புனேயில் உள்ள பி.ஜே. மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட வகுப்பில் பயிற்சி பெற்றவர் ஆவா்.

கிராமத்துக்கு சேவை

கட்சிரோலி எட்டப்பள்ளி தாலுகாவில் உள்ள சந்தன்வேலி கிராமத்தை சேர்ந்த தாரங் வைராகடே என்ற மாணவர் 720-க்கு 510 மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளார். தாரங் வைரகாடேக்கு தந்தை கிடையாது. அவர் தாய், பாட்டியுடன் வசித்து வருகிறார். மாணவரின் தாய் விவசாய கூலித்தொழில், தையல் மூலம் குடும்பத்தை கவனித்து வருகிறார்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் தாரங் வைராகடே கூறுகையில், "மருத்துவ கல்வி முடித்த பிறகு எனது கிராமத்துக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்" என்றார்.

இதேபோல கட்சிரோலி காவாதேட்டி கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் கோட்யாமி 464 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று உள்ளார். இவர் அந்த பகுதியில் ஆசிரம பள்ளியில் படித்த மாணவர் ஆவார். மாணவனின் குடும்பத்தினர் விவசாயம் செய்து வருகின்றனர்.

மாணவன் ஆகாஷ் கோட்யாமி கூறுகையில், "நாங்கள் பழங்குடியின மொழியான கோண்டி தான் பேசுவோம். ஆங்கிலத்தில் படிக்க சிரமமாக இருந்தது. பயிற்சி வகுப்பினர் தயாரித்து இருந்த டிஷ்னரி ஆங்கிலம் படிக்க உதவியாக இருந்தது. அது எனக்கு நம்பிக்கை கொடுத்தது. பயிற்சி வகுப்பில் இருந்தவர்கள் பொது தேர்வு மற்றும் நீட் தேர்வுக்கு உதவி செய்தனர்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்