லாரி மீது வேன் மோதி 12 பக்தர்கள் பலி; 23 பேர் காயம்

மராட்டியத்தில் லாரி மீது வேன் மோதிய கோர விபத்தில் 12 பக்தர்கள் உயிரிழந்தனர். 23 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-10-15 18:45 GMT

மும்பை, 

மராட்டியத்தில் லாரி மீது வேன் மோதிய கோர விபத்தில் 12 பக்தர்கள் உயிரிழந்தனர். 23 பேர் காயம் அடைந்தனர்.

லாரி மீது மோதிய வேன்

மராட்டிய மாநிலம் நாசிக்கை சேர்ந்த 35 பக்தர்கள் புல்தானாவில் உள்ள சாய்லானி பாபா தர்காவுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். நேற்று இரவு அவர்கள் புல்தானாவில் இருந்து நாசிக் நோக்கி மும்பை- நாக்பூர் சாம்ருத்தி சாலையில் வேனில் சென்று கொண்டு இருந்தனர். நேற்று அதிகாலை 12.30 மணியளவில் வேன் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டம் வைஜாபுர் அருகில் ஜாம்பர்காவ் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது, வேன் எதிர்பாராதவிதமாக சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த கன்டெய்னர் லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் வேனின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. அதில் இருந்த பயணிகள் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். உயிர் தப்பிய சிலர் உதவிகேட்டு சத்தம்போட்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் கியாஸ் கட்டர் மூலம் வேனின் இடிபாடுகளை அகற்றி படுகாயமடைந்தவர்களை மீட்டனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

12 பேர் பலி

இந்த துயர சம்பவத்தில் 4 மாத குழந்தை, 6 பெண்கள், 5 ஆண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் 11 பேர் நாசிக்கை சேர்ந்தவர்கள். ஒருவர் மட்டும் சத்ரபதி சம்பாஜிநகரை சேர்ந்தவர் ஆவார். படுகாயமடைந்த 23 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கன்டெய்னர் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை - நாக்பூர் சாம்ருத்தி சாலையில் கன்டெய்னர் லாரி மீது வேன் மோதி 12 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்