காட்டுப்பன்றி தாக்குதலில் பலியான மெக்கானிக் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு- மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

காட்டுப்பன்றி தாக்குதலில் பலியான மெக்கானிக்கின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-07-27 06:45 GMT

மும்பை, 

காட்டுப்பன்றி தாக்குதலில் பலியான மெக்கானிக்கின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மெக்கானிக் பலி

ரத்னகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மெக்கானிக் அருண் ரெடிஜ். இவர் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது காட்டுப்பன்றி ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியது. இந்த விபத்தில் அருண் ரெடிஜ் பலியானார்.

இதையடுத்து வனவிலங்கு தாக்கி பலியாகும் நபர்களுக்கு அரசு வழங்கும் இழப்பீடு கேட்டு அருண் ரெடிஜின் மனைவி அஞ்சனா விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு இழப்பீடு வழங்க அரசு மறுத்துவிட்டது.

அருண் ரெடிஜ் பலியாகி 48 மணி நேரத்துக்குள் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை, அவர் வாகன விபத்தில் தான் உயிரிழந்தார் என கூறி அஞ்சனாவுக்கு இழப்பீடு மறுக்கப்பட்டது.

ரூ.10 லட்சம் இழப்பீடு

இதை எதிர்த்து அஞ்சனா மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதிகள் கவுதம் பட்டேல், கவுரி கோட்சே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் காட்டுப்பன்றி மோதியதால் தான் விபத்து ஏற்பட்டு அருண் ரெடிஜ் உயிரிழந்தார் என கூறினர்.

மேலும் இந்த விவகாரத்தில் அரசு கருணை இல்லாமல் நடந்து கொண்டதாக கூறிய நீதிபதிகள், காட்டுப்பன்றி தாக்குதலால் பலியான அருண் ரெடிஜின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சத்தை 3 மாதத்துக்குள் 2019-ம் ஆண்டில் இருந்து கணக்கிட்டு 6 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்