வரதட்சணை கொடுமையால் 5 வயது மகளுடன் குளத்தில் குதித்து பெண் தற்கொலை
வரதட்சணை கொடுமையால் 5 வயது மகளுடன் குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிக்கமகளூரு-
வரதட்சணை கொடுமையால் 5 வயது மகளுடன் குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வரதட்சணை கொடுமை
தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா சூரேகெரே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியின் மகள் நிகாரிகா (வயது 5). மஞ்சுநாத்-கவிதாவுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது, கவிதாவின் பெற்றோர் மஞ்சுநாத்துக்கு நகை-பணம் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
திருமணம் முடிந்த புதிதில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அவர்களுக்குள் வரதட்சணையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மஞ்சுநாத், கூடுதல் வரதட்சணை கேட்டு கவிதாவை கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
தற்கொலை
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரதட்சணை கேட்டு மஞ்சுநாத், கவிதாவை அடித்து, உதைத்துள்ளார். இதனால் மனமுடைந்த கவிதா, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். மேலும் தான் இறந்துவிட்டால் தனது குழந்தை அனாதையாகிவிடும் என கருதிய அவர், மகள் நிகாரிகாவையும் தன்னுடன் அழைத்து செல்ல முடிவு செய்தார்.
அதன்படி நேற்று முன்தினம் மகள் நிகாரிகாவை அழைத்து கொண்டு கவிதா அங்குள்ள பெரிய ஏரிக்கு சென்றார். பின்னர், கவிதா தன்னுடைய துப்பட்டாவால் மகள் நிகாரிகாவை தனது உடலுடன் சேர்த்து கட்டிக் கொண்டு ஏரிக்குள் குதித்தார். இதில் அவர்கள் 2 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கணவர் கைது
இதுபற்றிய தகவல் அறிந்தும் சன்னகிரி போலீசார் விரைந்து வந்து நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஏரிக்கு சென்று கவிதா மற்றும் அவரது மகள் நிகாரிகாவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வரதட்சணை கொடுமையால் கவிதா தனது மகள் நிகாரிகாவுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து சன்னகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதாவின் கணவர் மஞ்சுநாத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.