விளைநிலத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்: காபி, வாழை நாசம்
சக்லேஷ்புராவில் விளைநிலத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்ததில் காபி, வாழை மரங்கள் நாசமானது.
ஹாசன்:
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகாவில் கள்ளஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி காட்டுயானைகள் இரைத்தேடி ஊருக்குள், விளைநிலத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்த வந்த தாய் மற்றும் குட்டி யானை, கள்ளஹள்ளி பகுதியை சேர்ந்த பசவராஜ் என்பவரின் வீட்டிற்குள் நுழைய முயன்றது. இதைப்பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் யானை செல்லவில்லை. மாறாக கிராமத்திற்குள்ளேயே சுற்றி வந்தது. இதையடுத்து சில மணி நேரம் கழித்து கிராமத்தில் இருந்து வெளியேறிய யானை, அங்கிருந்த காபி மற்றும் வாழை தோட்டத்திற்கு நுழைந்தது. அப்போது அங்கிருந்து காபி செடி மற்றும் வாழை மரங்களை முறித்துப்போட்டு நாசப்படுத்தியது. இதையடுத்து காட்டுயானைகள், வனப்பகுதிக்குள் சென்றது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டுயானைகள் நாசப்படுத்திய விளைநிலங்களை பார்வையிட்டனர். மேலும் காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.