கிராம பஞ்சாயத்து உறுப்பினர் படுகொலை

மாலூரில் அரசியல் முன்விரோதம் காரணமாக கிராம பஞ்சாயத்து உறுப்பினரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.

Update: 2023-10-21 18:45 GMT

மாலூர்:

மாலூரில் அரசியல் முன்விரோதம் காரணமாக கிராம பஞ்சாயத்து உறுப்பினரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.

கிராம பஞ்சாயத்து உறுப்பினர்

கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா ஜெயமங்களா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது மினிசந்திரா கிராமம். இந்த கிராமத்தில் அனில்குமார்(வயது 35) என்பவர் வசித்து வந்தார். இவர் ஜெயமங்களா கிராம பஞ்சாயத்து உறுப்பினராகவும் இருந்து வந்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவருக்கு அரசியல் ரீதியாக பல முன்விரோதங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் நேற்று காலையில் மினிசந்திரா கிராம கேட் அருகே மாலூர் முக்கிய சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம கும்பல், அனில் குமாரை சரமாரியாக தாக்கியது. மேலும் தாங்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அனில்குமாரை மர்ம நபர்கள் பயங்கரமாக வெட்டினர்.

படுகொலை

இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அனில் குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுபற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாராயணா, துணை போலீஸ் சூப்பிரண்டு மல்லேஷ், இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் மாலூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அனில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்