மண்டியாவில் பா.ஜனதாவினர் உள்பட பல்வேறு தரப்பினர் போராட்டம்

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று மண்டியாவில் பா.ஜனதாவினர் உள்பட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-10-11 03:17 IST

மண்டியா:-

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போனது. இருப்பினும் காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதை கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மண்டியா டவுனில் உள்ள சர் எம்.விசுவேஸ்வரய்யா சிலை முன்பு நேற்று அகில பாரத ஜீவ விமா பிரதிநிதிகள் கூட்டமைப்பினர், விவசாயிகள் சங்கத்தினர், கதம்பை சைன்யா எனும் கன்னட அமைப்பினர், பாரதிய மஜ்ஜர் சங்கத்தினர், ராமநகர் மாவட்ட மேகதாது போராட்ட கமிட்டியினர், பா.ஜனதாவினர் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.

வலியுறுத்தல்

மேலும் அவர்கள் ஏற்கனவே அங்கு கடந்த 36 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவும் தெரிவித்தனர். போராட்டத்தின் போது அவர்கள் மாநில அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவற்றுக்கு எதிராகவும், முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவி விலக கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பை உடனடியாக நிறுத்தக்கோரியும் அவர்கள் வலியுறுத்தினர். இதற்கிடையே காவிரி ஹித ரக்ஷனா எனும் விவசாயிகள் சங்கத்தினர் மைசூரு-பெங்களூரு நெடுஞ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

வாகன பேரணி

அப்போது அவர்கள் மாநில அரசுக்கு எதிராகவும், காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதற்கிடையே மண்டியா டவுனில் உள்ள நீர்ப்பாசன துறை அலுவலகத்தில் அமைந்திருக்கும் காவிரித்தாய் சிலைக்கு நேற்று கன்னட அமைப்பினர் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் அவர்கள் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் இருந்து குடகு மாவட்டத்தில் உள்ள தலக்காவிரிக்கு வாகன பேரணி மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் காவிரியை பாதுகாக்க வேண்டும், காவிரி நீரை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கோஷங்கள் எழுப்பினர். காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் மண்டியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்