தென்னிந்தியாவில் மைசூரு பல்கலைக்கழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது
தென்னிந்தியாவில் மைசூரு பல்கலைக்கழகம் கல்வியில் சிறந்து விளங்கி வருகிறது என கவர்னர் தாவர்சந்த் கெலாட் கூறினார்.;
மைசூரு:
மைசூரு பல்கலைக்கழகம்
மைசூரு மகாணத்தை ஆண்ட மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் கல்விக்கு முன்னுரிமை வழங்கி பள்ளி, கல்லூரிகளை உருவாக்கினார். தென்னிந்தியாவில் முதன்முறையாக மைசூருவில், மைசூரு பல்கலைக்கழகத்தை நால்வடி கிருஷ்ணராஜ உடையார் உருவாக்கினார்.
இந்த பல்கலைக்கழகம் உருவாகி 100 ஆண்டுகளுக்கு மேலாகி உள்ளது. இந்தநிலையில், நேற்று மைசூரு பல்கலைக்கழகத்தில் 103-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவில், கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். பின்னர் கவர்னர் பேசுகையில், தென்னந்தியாவிலேயே மைசூரு பல்கலைக்கழகம் கல்வியில் சிறந்து விளங்கி வருகிறது.
மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் உருவாக்கிய இந்த பல்கலைக்கழகம் இன்றும் மைசூரு பகுதி ஏழை மக்களுக்கு வரப்பிரசாதம் ஆகும். மன்னர் கல்விக்கு நன்கொடை, கலை, சாகித்தியம், கலாசாரத்திற்கும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார், என்றார்.
32,240 பேருக்கு பட்டம்
இந்த விழாவில் மொத்தம் 32,240 மாணவ-மாணவிகள் பட்டங்கள் பெற்றனர். இதில் 12,051 மாணவர்களும், 20,189 மாணவிகளும் அடங்கும். இந்த ஆண்டு மாணவிகளே அதிக பட்டங்களை பெற்று உள்ளனர்.
இதில் அதிக மதிப்பெண் எடுத்த 420 மாணவ-மாணவிகளுக்கு தங்க பதக்கங்களும், 275 பேருக்கு ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. மேலும் 4 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது.
விழாவில் உயர்கல்வித்துறை மந்திரி எம்.சி.சுதாகர், ராஜீவ் காந்தி ஆரோக்கிய விஞ்ஞான கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் பி.எஸ்.சங்கர், மைசூரு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் லோகநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.