ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ்:மண்டியாவில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மண்டியாவில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.;
மண்டியா:
மண்டியா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அஸ்வதி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி ஜெயராம் ராயபுரா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஜெயராம் ராயபுரா பேசுகையில், மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குறித்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் தக்க நிவாரணம் வழங்கப்படும்.
பள்ளிகள், அங்கன்வாடி கட்டிடகள் மழையால் இடிந்து விழுந்துள்ளது. மழையில் அடித்து செல்லப்பட்ட சாலை, மேம்பாலங்கள், சேதமடைந்த மின் கம்பங்கள் ஆகியவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தின் மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் குடிநீர் இணைப்பு பணியை அதிகாரிகள் முடிக்க வேண்டும் என்றார்.