போதைப்பொருள் வழக்கில் கேரளாவை சேர்ந்த 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை: சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
போதைப்பொருள் வழக்கில் கேரளாவை சேர்ந்த 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பெங்களூரு:
பெங்களூரு மைகோ லே-அவுட் போலீசார் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 7-ந் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 2 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் கேரளாவை சேர்ந்த ஜான்சன் ஜோசப்(வயது 31), பிஜூ ஆபிரகாம்(38) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு போதைப்பொருட்களை கடத்தி வந்து கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அதிக விலைக்கு விற்றதும் தெரிந்தது. கைதான 2 பேர் மீதும் பெங்களூரு 33-வது சிட்டி சிவில் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தனர்.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது ஜான்சன், பிஜூ ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் நீதிபதி கூறினார். அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்தார். இதையடுத்து 2 பேரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று போலீசார் சிறையில் அடைத்தனர்.