சிக்பள்ளாப்பூர் அருகே விபத்து: அரசு பஸ் மீது லாரி மோதல்; தம்பதி உள்பட 10 பேர் படுகாயம்
சிக்பள்ளாப்பூர் அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.;
கோலார் தங்கவயல்:
அரசு பஸ் மீது லாரி மோதல்
பெங்களூருவில் இருந்து சிக்பள்ளாப்பூர் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று சென்றது. சிக்பள்ளாப்பூர் தாலுகா ஹொன்னேனஹள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது அரசு பஸ் மீது பின்னால் வேகமாக வந்த லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அரசு பஸ்சின் பின்பகுதி பலத்த சேதமடைந்தது.
10 பேர் படுகாயம்
இதில் இடிபாடுகளில் சிக்கி பஸ்சில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதில் பெங்களூருவை சேர்ந்த தம்பதியான சீனிவாஸ், அவரது மனைவி தீபாவும் அடங்குவர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சிக்பள்ளாப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அந்த தம்பதி கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அவர்கள், மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சிக்பள்ளாப்பூர் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த விபத்து குறித்து சிக்பள்ளாப்பூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.