மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க பசவராஜ் பொம்மை இன்று மீண்டும் டெல்லி பயணம்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் டெல்லி செல்ல உள்ளார். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து மேலிட தலைவர்களை சந்தித்து அவர் பேச முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ஈசுவரப்பா, ரமேஷ் ஜார்கிகோளிக்கு மீண்டும் மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.;
பெங்களூரு:
எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. அதே நேரத்தில் மந்திரிசபையில் 5 இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் மந்திரிசபை விரிவாக்கம் செய்ய பா.ஜனதா மேலிடம், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை. கர்நாடக மேல்-சபை தேர்தல், டெல்லி மேல்-சபை தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி மந்திரிசபை விரிவாக்கம் தொடர்ந்து தள்ளிப்போன வண்ணம் இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருப்பதால், மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இன்று டெல்லி பயணம்
அதே நேரத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்கூட்டியே தோ்தல் நடத்தப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி வருவதால், மந்திரிசபை விரிவாக்கம் தொடர்ந்து தள்ளிப்போன வண்ணம் இருக்கிறது. இதன் காரணமாக மந்திரிசபை பதவியை எதிர்பார்த்து காத்திருந்த எம்.எல்.ஏ.க்களும் விரக்தி அடைந்துள்ளனர். இதற்கிடையில், நேற்றுமுன்தினம் டெல்லி சென்றிருந்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபச்சாரத்தில் கலந்து கொண்டு பெங்களூரு திரும்பினார்.
இந்த நிலையில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்கிறார். நாளை (திங்கட்கிழமை) புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்க உள்ளாா். இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அவர் டெல்லி செல்ல உள்ளார். அதே நேரத்தில் டெல்லியில் பா.ஜனதா மேலிட தலைவர்களையும் சந்தித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச இருக்கிறார்.
மந்திரிசபை விரிவாக்கம்
அதாவது வருகிற 28-ந் தேதியுடன் முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இதுபற்றி அவர் மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளாா். அத்துடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்தும் பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மந்திரிசபையில் தற்போது 5 இடங்கள் காலியாக உள்ளன. அந்த 5 இடங்களுக்கு பதிலாக 2 இடங்களை மட்டும் நிரப்ப முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது ஒப்பந்ததாரர் சந்தோஷ் தற்கொலை வழக்கில் ஈசுவரப்பா குற்றமற்றவர் என்று போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே ஆபாச வீடியோ வழக்கிலும் ரமேஷ் ஜாாக்கோளி குற்றமற்றவர் என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் காரணமாக ஈசுவரப்பாவும், ரமேஷ் ஜார்கிகோளியும் மந்திரி பதவியை ராஜினாமா செய்திருந்தார்கள்.
ஈசுவரப்பா, ரமேஷ் ஜார்கிகோளிக்கு...
தற்போது அவர்கள் 2 பேரும் தங்கள் மீதான புகார்களில் இருந்து குற்றமற்றவர்கள் என்று வெளியே வந்திருப்பதால், ஈசுவரப்பா மற்றும் ரமேஷ் ஜார்கிகோளிக்கு மட்டும் மந்திரி பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஈசுவரப்பா குருபா சமூகத்தை சேர்ந்தவரும், ரமேஷ் ஜார்கிகோளி வால்மிகி சமூகத்தை சேர்ந்தவரும் ஆவாா்கள். அத்துடன் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா அரசு அமைய ரமேஷ் ஜார்கிகோளி காரணமாக இருந்தவர் என்பதால், அவருக்கு மந்திரி பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வருகிற 28-ந் தேதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் ஓராண்டு நிறைவு விழா முடிந்த பின்பு, மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படலாம் என்ற தகவல்ககள் வெளியாகி உள்ளது.