சமூகத்திற்கு தேவையான கருத்துள்ள படங்கள் வர வேண்டும்

சமூகத்திற்கு தேவையான கருத்துள்ள திரைப்படங்கள் வர வேண்டும் என முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

Update: 2023-10-15 18:45 GMT

மைசூரு

திரைப்பட உற்சவம்

உலகப்பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த தசரா விழாவை கன்னட இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் மைசூரு கலா மந்திராவில் தசரா திரைப்பட விழாவை முன்னிட்டு திரைப்பட உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. இந்த உற்சவ நிகழ்ச்சியை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், பொதுமக்கள் முன்னேற்றம், சாதனைகள், குடும்பத்துடன் பார்க்கும் வகையில் திரைப்படங்கள் வந்தால் சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் நல்லது. சமூகத்திற்கு தேவையான கருத்துள்ள திரைப்படங்கள் வர வேண்டும்.

திரைப்பட ரசிகர்களுக்கு திரைப்பட உற்சவம் ஒரு வரப்பிரசாதம். இன்னும் 7 நாட்கள் வரை திரைப்படங்களை பார்த்து கொள்ளலாம். அதற்காக மைசூரு டவுனில் உள்ள ஐநாக்ஸ், டி.ஆர்.சி. போன்ற மால்களில் நல்ல திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

திரைப்பட ரசிகர்கள்

இதனை திரைப்பட ரசிகர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

திரைப்படங்களில் மக்களுக்கு நல்ல தகவல்களை தெரிவிப்பது மூலமாக வாழ்க்கையின் மதிப்பை சமுதாயத்திற்கும், நாட்டுக்கும் தெரிவிக்கும் வகையில் திரையுலகம் வேலை செய்து வந்து கொண்டிருக்கிறது. தரமான திரைப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு அரசாங்கம் உதவி செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில், கன்னட திரைப்படத்தின் மறைந்த நகைச்சுவை நடிகர் நரசிம்மராஜு வின் 100-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு முதல்-மந்திரி சித்தராமையா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் நரசிம்மராஜு மகள் சுதா நரசிம்மராஜு கலந்து கொண்டார்.

பின்னர் கன்னட திரைப்பட சிறப்பு தகவல்கள் அடங்கிய புத்தகத்தை முதல்-மந்திரி சித்தராமையா வெளியி்ட்டார். நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஹம்சலேகா, மந்திரி எச்.டி.மகாதேவப்பா, ஹரிஷ் கவுடா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்