கொரோனா பரவல் அதிகரிப்பதை கண்டு மக்கள் பயப்பட தேவை இல்லை: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வேண்டுகோள்

கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதை கண்டு மக்கள் பயப்பட தேவை இல்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-06-06 15:24 GMT

பெங்களூரு:

முன்எச்சரிக்கை நடவடிக்கைகள்

கர்நாடகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 300-ஐ தாண்டியுள்ளது. குறிப்பாக பெங்களூருவில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் மாநில அரசின் சுகாதாரத்துறை சற்று கவலை அடைந்துள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட தேவை இல்லை. சுகாதாரத்துறை செயலாளர் தனது துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிப்பார். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறைகளின் மந்திரிகள் மற்றும் கொரோன தடுப்பு நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்தி புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

தவறான எண்ணங்கள்

கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் ஆலோசனைகளை மாநில அரசு செயல்படுத்தும். கர்நாடகத்தில் தற்போது ஆதங்கப்படும் நிலை ஏற்படவில்லை. பள்ளி பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டதில் ஏதாவது தவறுகள் நடந்திருந்தால் அதை சரிசெய்ய அரசு தயாராக உள்ளது. ஆனால் இதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன.

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட சிலர் தினமும் குழப்பத்தை ஏற்படுத்தும் கருத்துகளை கூறி வருகிறார்கள். இதன் மூலம் மக்களிடையே தவறான எண்ணங்கள் ஏற்பட செய்கிறார்கள். தேசியகவி குவெம்பு, பசவண்ணர் குறித்த பாடங்களில் தவறுகள் இருந்தால் சரி செய்வோம். ஆனால் புத்தகங்களை சரியாக படிக்காமல் அரசை குறை சொல்வது சரியல்ல. குழப்பம் ஏற்படுத்தும் கருத்துகளை கூறுவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்