பிரியப்பட்டணாவில் பயங்கரம்: வளர்ப்பு தாயை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்

பிரியப்பட்டணாவில் மது அருந்த பணம் கொடுக்காததால் வளர்ப்பு தாயை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-07-01 23:23 IST

மைசூரு:

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தகராறு

மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா பைலுகுப்பே கிராமத்தை சேர்ந்தவர் சூஷா மேரி (வயது 70). இவருடைய மகன் மார்ட்டின் தேவன் (வயது 20). கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சூஷா மேரி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குடகு மாவட்டம் சித்தாப்புராவில் காவிரி ஆற்றின் அருகே கிடைத்த 6 மாத குழந்தையை எடுத்து மார்ட்டின் தேவன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.

மார்ட்டின் தேவன் அந்தப்பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர், மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையானதாக தெரிகிறது. இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்தி வீட்டுக்கு வந்து தாயுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

கழுத்தை அறுத்து கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம், மது அருந்த பணம் கொடுக்கும்படி தாய் சூஷா மேரியிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர் தாயிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மார்ட்டின் தேவன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சூஷா மேரியின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து மார்ட்டின் தேவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பிரியப்பட்டணா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான சூஷா மேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வாலிபர் கைது

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மது அருந்த பணம் கொடுக்காததால் வளர்ப்பு தாய் சூஷா மேரியை மார்ட்டின் தேவன் கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து பிரியப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மார்ட்டின் தேவனை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்