யானைகளை ஓவியங்களால் அழகுபடுத்தும் பணி

ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் தசரா யானைகளை ஓவியங்களால் அழகுபடுத்தும் பணியை அரசு பள்ளி ஆசிரியர் தலைமையிலான குழுவினர் தொடங்கியுள்ளனர்.

Update: 2023-10-21 18:45 GMT

மைசூரு:

ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் தசரா யானைகளை ஓவியங்களால் அழகுபடுத்தும் பணியை அரசு பள்ளி ஆசிரியர் தலைமையிலான குழுவினர் தொடங்கியுள்ளனர்.

15 யானைகள் பங்கேற்பு

கர்நாடகத்தில் தற்போது மைசூரு தசரா விழா ெகாண்டாட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. திரும்பிய பக்கம் எல்லாம் கலை, கலாசாரம், பண்பாட்டை விளக்கும் நிகழ்ச்சிகள், போட்டிகள், கண்கவர் நிகழ்ச்சிகளும் மைசூருவில் நடைபெற்று வருகிறது. 15-ந்தேதி தொடங்கிய தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி எனும் தசரா ஊர்வலம் வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது.

இந்த ஊர்வலத்தில் பங்கேற்க 15 யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை அபிமன்யு யானை சுமந்து செல்லும். அதைத்தொடர்ந்து மற்ற யானைகள் வீரநடை போடும். இந்த ஊர்வலத்தில் போலீசார், பேண்டு வாத்தியக்குழுவினர், பல்வேறு கலைக்குழுவினர், அலங்கார ஊர்திகள் அணிவகுத்து செல்ல உள்ளன.

ஓவியங்களால் அழகுபடுத்தும் பணி

தசரா ஊர்வலத்தில் பங்கேற்கும் 15 யானைகளின் தும்பிக்கை மற்றும் வயிற்று பகுதிகளில் வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு இருக்கும். இந்த ஓவியங்களை வரைந்து யானைகளை அழகுப்படுத்தி வருபவர், மைசூருவை சேர்ந்த நாகலிங்கப்பா ரா பதிகேரா ஆவார். அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராக இருந்து வரும் நாகலிங்கப்பா, தனது சகோதரர்கள் நாராயண் பதிகேரா, அருண் பதிகேரா, நண்பர்கள் மதுசூதனன், சின்னு ஆகியோருடன் சேர்ந்து இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் தசரா யானைகளின் உடலில் ஓவியங்களை தீட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தி வருகிறார். இந்த நிலையில் தசரா ஊர்வலத்திற்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் தசரா யானைகளை ஓவியங்களால் அலங்கரிக்கும் பணி நேற்று முன்தினமே நாகலிங்கப்பா குழுவினர் தொடங்கிவிட்டனர்.

இயற்கை நிறமூட்டிகள்

இதுகுறித்து ஓவிய கலைஞர் நாகலிங்கப்பா கூறியதாவது:-

யானையின் உடல் அமைப்புக்கு ஏற்ப ஓவியங்களை தேர்வு செய்து வரைகிறோம். சில நேரங்களில் யானைகள் தும்பிக்கை மற்றும் வாலால் தட்டி ஓவியத்தை சிதைத்துவிடும். ஓவியம் வரையும் போது சில நேரங்களில் வாலால் எங்களை யானை தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் யானையின் காதுகளில் ஓவியம் தீட்டும் போது பாகன்கள் எங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

உயிருள்ள யானைகளுக்கு வர்ணம் பூச வேண்டும் என்றால், அதனுடன் சகஜமாக பழகி அதன் சூழ்நிலையை புரிந்து தான் செயல்பட வேண்டியதுள்ளது. முதலில் வெள்ளை நிற வர்ணம் ஓவியத்தை வரைந்து அதன் பிறகு மரபசை கலந்து இயற்கை நிறமூட்டிகளால் அழகுப்படுத்துகிறோம். ஒவ்வொரு யானைக்கும் 2 முதல் 3 லிட்டர் நிறமூட்டிகள் தேவைப்படும். கொஞ்சம் மழை பெய்தாலும் இந்த வர்ணம் அழியாது.

முகத்தில் வெண்புள்ளிகள்

தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு முகத்தில் வெண்புள்ளிகள் உள்ளன. இதனால் அதற்கு முகத்தில் சிறப்பு வர்ணம் பூசி அதன் பிறகு தான் ஓவியம் வரைகிறோம். கடந்த 2004-ம் ஆண்டு நாங்கள் முதல் முறையாக பலராமா யானைக்கு ஓவியம் தீட்டினோம். அதனை அப்போதைய மைசூரு மன்னர் ஸ்ரீகண்டதத்த நரசிம்ம உடையார் பார்வையிட்டு எங்களை பாராட்டினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்