வெள்ளி பல்லக்கு சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது

சிவமொக்கா தசரா விழாவில் வெள்ளி பல்லக்கு சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது

Update: 2023-10-24 18:45 GMT

சிவமொக்கா:

மைசூருவில் உலகப்பிரசித்தி பெற்ற தசரா விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தசரா விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நேற்று யானைகள் ஜம்பு சவாரி ஊர்வலத்துடன் நிறைவடைந்தது. ஜம்பு சவாரி ஊர்வலத்தை முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதனை லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். இதேப்போல் கர்நாடகத்தில் சிவமொக்கா, குடகு, ஸ்ரீரங்கப்பட்டணா ஆகிய இடங்களில் தசரா விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவமொக்கா தசரா விழா மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தசரா விழா நடத்த மாநில அரசு நிதியும் ஒதுக்கியது. இந்த ஆண்டு தசரா விழாவில் கலந்து கொள்ள 3 யானைகள் சக்ரேபைலு யானைகள் பயிற்சி முகாமில் இருந்து சிவமொக்கா வந்தன. அந்த யானைகளுக்கு தினமும் நடைபயிற்சி, பாரம் தூக்கும் பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு யானைகள் தங்கி இருந்த இடத்தில் நேத்ராவதி யானை குட்டி ஈன்றது. இதனால் யானைகள் ஜம்பு சவாரி ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, நேத்ராவதி யானை, குட்டி யானை, மற்றும் ேஹமாவதி யானை சக்ரேபைலு யானைகள் பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் சரக்கு வாகனத்தில் வெள்ளி பல்லக்கை கொண்டு செல்ல தசரா குழு முடிவு செய்தது. அதன்படி, வெள்ளியால் ஆன சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்ட சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டது. கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து வெள்ளி பல்லக்கு புறப்பட்டது. அப்போது பக்தர்கள் மாலை, பூக்களை சரக்கு வாகனம் மீது தூவினர்.

Tags:    

மேலும் செய்திகள்