பொதுமக்கள் பாலிதீன் பைகள் பயன்பாட்டை கைவிட வேண்டும் கலெக்டர் வெங்கடராஜா வேண்டுகோள்
நிலத்தடி நீர் மாசு படுவதை தடுக்க பொதுமக்கள் பாலிதீன் பைகள் பயன்பாட்டை கைவிட வேண்டும் என கலெக்டர் வெங்கடராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோலார்:
கிராம தங்கல் நிகழ்ச்சி
கோலார் மாவட்டம் சீனிவாசப்புரா தாலுகா எல்லூர் வருவாய் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட நெர்னஹள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மாவட்ட வருவாய் துறை சார்பில் கிராம தங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வெங்கடராஜா கலந்துகொண்டு கிராம தங்கல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-
நெர்னஹள்ளி கிராமத்தில் சாலை வசதி இல்லை. எனவே நெர்னஹள்ளி கிராமத்தை மற்ற கிராமங்களுடன் இணைக்கும் வகையில் விரைவில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். சாலை பணிகள் நிறைவடைந்ததும் போக்குவரத்து வசதிக்காக அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராம மக்களின் கோரிக்கைகள் அனைத்து விரைவில் நிறைவேற்றப்படும். கிராமத்தில் உள்ள கோவில்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மேம்படுத்தப்படும். கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய கல்வி உதவித்தொகை உரிய முறையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலிதீன் பைகள் பயன்பாட்டை...
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பி.யூ.சி தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும். ஜலஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்திரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கப்படும். அரசு ஒதுக்கி உள்ள காலி நிலத்தில் பயனாளிகள் தாராளமாக வீடுகளை கட்டிக்கொள்ளலாம்.
மக்களுக்கு தேவையான வளர்ச்சிப் பணிகளை கிராம பஞ்சாயத்து நிர்வாகம் உரிய நேரத்தில் செய்து கொடுக்கவேண்டியது அவசியம். சுற்றுப்புற சூழல் பாதிப்பதுடன், நிலத்தடி நீர் மாசு படுவதால் அதை தடுக்க பாலிதீன் பைகள் பயன்பாட்டை பொதுமக்கள் கைவிட வேண்டும். வீடுகளில் கழிவறைகள் கட்ட ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை அரசு நிதி ஒதுக்குகிறது. அந்த நிதியை கொண்டு கழிவறைகள் கட்டி கிராம மக்கள் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் சீனிவாசப்பூர் தாசில்தார் ஷரீன் தாஜ் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.