ராமநகரில் குப்பை கிடங்கு அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்; குமாரசாமி வலியுறுத்தல்

ராமநகரில் பெங்களூரு குப்பை கிடங்கு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-10-15 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பிராண்ட் பெங்களூரு உருவாக்குவதாக சிலர் சொல்கிறார்கள். ஆனால் அதன் ரகசியம் தற்போது பகிரங்கமாகியுள்ளது. கொள்ளையடிக்கும் நோக்கத்தில் பெங்களூருவின் 4 திசைகளிலும் குப்பை கிடங்கிற்காக வேலி போட முயற்சி செய்கிறார்கள். ராமநகரில் குப்பை கிடங்கு அமைத்து தினமும் 1,630 டன் குப்பைகளை கொட்டினால், அங்கு வசிக்கும் மக்களின் நிலை என்னவாகும்.

மண்டூர் மக்கள் சந்தித்த கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. யஷ்வந்தபுரம் மக்கள் பெரிதும் கஷ்டப்படுகிறார்கள். தொட்டபள்ளாபுரா மக்களும் குப்பை கொட்டுவதால் கஷ்டப்படுகிறார்கள். தற்போது குப்பைகளை கொட்ட ராமநகரை தேர்ந்தெடுத்துள்ளனர். பெங்களூருவை சுற்றிலும் குப்பை தொட்டிகளை அமைத்து, மக்களை சிக்கலில் சிக்க வைக்க சதி நடக்கிறது.

இது மிகப்பெரிய தவறு. ஏற்கனவே பெங்களூருவில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த சுற்றுச்சூழலை மேலும் கெடுக்க முயற்சி செய்கிறார்கள். பெங்களூருவை சுற்றியுள்ள மாவட்டங்களில் தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி போன்ற தொழில்களில் விவசாயிகள் சிறந்து விளங்குகிறார்கள். குப்பை கிடங்குகள் அமைப்பது ஒருபுறம் இருந்தால், அதன் மூலம் பாக்கெட்டில் பணம் நிரப்பி கொள்வது இன்னொரு திட்டம் ஆகும்.

மாம்பழம், பட்டு, பழங்கள், காய்கறி சாகுபடி செய்யும் ராமநகரில் 100 ஏக்கரில் பெரிய குப்பை கிடங்கு அமைக்க சதி செய்துள்ளனர். ஏற்கனவே விருஷபாவதி ஆறு உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் பாழாகிவிட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் அசுத்தம் அடைந்துவிட்டது. அண்டை மாவட்ட மக்களின் சமாதி மீது பிராண்ட் பெங்களூருவை உருவாக்கினால் அதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். ராமநகாில் குப்பை கிடங்கு அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் வீதியில் இறங்கி போராடுவோம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்