ஏரியில் விஷம் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்தன-போலீஸ் விசாரணை
பங்காருபேட்டை தாலுகாவில் ஏரியில் விஷம் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்திருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.;
கோலார் தங்கவயல்:
கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா தோணிமடகு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடகிரி. இவர் அதே கிராமத்தில் உள்ள ஏரியை குத்தகைக்கு எடுத்து அதில் மீன்கள் வளர்த்து தொழில் செய்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன் ஏரியை குத்தகைக்கு எடுத்த வெங்கடகிரி அதில் மீன்களை விட்டார். இந்த நிலையில் நேற்று ஏரிக்கு சென்ற வெங்கடகிரி ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, பங்காருபேட்டை தாசில்தார் அலுவலகத்துக்கு சென்ற வெங்கடகிரி அங்குள்ள அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்தார்.
அதில், தான் தோணிமடகு ஏரியை குத்தகைக்கு எடுத்து மீன்கள் வளர்த்து வந்த நிலையில் ஏரியில் யாரோ மர்ம நபர்கள் விஷம் கலந்துவிட்டனர். இதனால் ஏரியில் மீன்கள் செத்துவிட்டன. இதன்காரணமாக தனக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் தாலுகா நிர்வாகம் தனக்கு நஷ்டஈடு வழங்குவதுடன், மீன் பிடிக்கும் உரிமத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீடிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் இதுபற்றி பங்காருபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.