காட்டுயானைகள் புகுவதை தடுக்க கோரி வனத்துறை அலுவலகம் முற்றுகை

மாஸ்தி, காமசமுத்திரம் பகுதிகளில் காட்டுயானைகள் புகுவதை தடுக்க கோரி வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-16 18:45 GMT

கோலார் தங்கவயல்:

காட்டுயானைகள் அட்டகாசம்

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா மாஸ்தி, காமசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி காட்டுயானைகள் தொல்லை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து வரும் காட்டுயானைகள், மாஸ்தி மற்றும் காமசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் விளைபயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.

இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், 'மாஸ்தி, காமசமுத்திரம் பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட பகுதிகள் தமிழக எல்லை வரை உள்ளன. இந்த பகுதிகள் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டத்தையொட்டி அமைந்துள்ளன. இதனால் அங்கிருந்து வரும் காட்டுயானைகள் இங்குள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் நாங்கள்(விவசாயிகள்) பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதுபற்றி வனத்துறை அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று கூறினர்.

வனத்துறை அலுவலகம் முற்றுகை

இந்த நிலையில் நேற்று மாஸ்தி, காமசமுத்திரம் பஞ்சாயத்து பகுதிகளுக்கு உட்பட்ட ஏராளமான விவசாயிகள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் காட்டுயானைகள் கிராமங்களுக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி அறிந்த வனத்துறையினர் உடனடியாக அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது காட்டுயானைகள், கிராமங்களுக்கு புகுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்