ஒப்பந்ததாரர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் மந்திரி முனிரத்னா அதிரடி பேட்டி
40 சதவீதம் கமிஷன் கேட்பதாக குற்றச்சாட்டு கூறும் ஒப்பந்ததாரர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று மந்திரி முனி ரத்னா தெரிவித்துள்ளார்.;
கோலார் தங்கவயல்:
கோலாரில் நேற்று மந்திரி முனிரத்னா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கோலார் மாவட்டத்தில் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டது. டெண்டரை எடுத்த ஒப்பந்ததாரர்களிடம் நான் 40 சதவீதம் கமிஷன் கேட்டதாக சில ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் குறிப்பிடும்படியாக ஒப்பந்ததாரர்கள் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவிடம் புகார் கூறியதாகவும் தெரியவந்துள்ளது.
அதன்பேரில் சித்தராமையா என்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதனால் எனக்கு மட்டும் இன்றி பா.ஜனதா கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டை நிரூபிக்கும்படி ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் அவர்கள் பதில் அளிக்கவில்லை. அதனால், என் மீது புகார் கூறிய ஒப்பந்ததாரர்களுக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்.
அவர்கள் 7 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடருவேன். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் தங்களது ஆதாரங்களை, பிரதமர், லோக் அயுக்தா, கவர்னர் என யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கட்டும். நான் கோர்ட்டு மூலம் சட்டரீதியான வழக்குத்தொடர்ந்து நிரபராதி என்று நிரூபிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.