வீரசாவர்க்கரின் உருவம் அச்சிடப்பட்ட பேனரை அகற்றியதால் பதற்றம்:போலீஸ் தடியடி - 144 தடை உத்தரவு அமல்

சிவமொக்காவில் நடந்த சுதந்திர தின விழவில் வீரசாவர்க்கரின் உருவம் அச்சிடப்பட்ட பேனரை அகற்றியதால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

Update: 2022-08-15 16:57 GMT

சிவமொக்கா:

வீரசாவர்க்கர் பேனர்

கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் நேற்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதுபோல் சிவமொக்கா மாவட்டத்திலும் சுதந்திர தின விழா வெகுவிமரிசையாக நடந்தது. இதையொட்டி பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே பிளக்ஸ் போர்டுகள், பேனர்களை வைத்திருந்தனர். அமீர் அகமது சதுக்கத்தில் ஒரு தனியார் வணிக வளாகத்தில் நுழைவு வாயில் முன்பு சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவங்கள் அச்சிடப்பட்ட பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தன.

அதில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரும், இந்து அமைப்பின் தலைவராகவும் இருந்த வீரசாவர்க்கர் உருவப்படம் அச்சிடப்பட்ட ஒரு பேனரும் வைக்கப்பட்டு இருந்தது.

தகராறு

இந்த நிலையில் ஒரு அமைப்பினர் சுதந்திர போராட்டத்துக்கும், வீரசாவர்க்கருக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி அவரது உருவப்படம் அச்சிடப்பட்டு இருந்த பிளக்ஸ் போர்டை அகற்றினர். இதனால் இந்து அமைப்பினருக்கும், மற்ற பிற அமைப்பினர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் அமீர் அகமது சதுக்கத்தில் மீண்டும் வீரசாவர்க்கரின் உருவம் அச்சிடப்பட்ட பேனர் ஒன்று வைக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த மற்றொரு தரப்பினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பேனரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் திப்பு சுல்தான் உருவப்படம் அச்சிடப்பட்ட ஒரு பேனரை வைத்து அவரது ஆதரவாளர்கள் சுதந்திர தின விழாவை கொண்டாடினர்.

144 தடை உத்தரவு

இதில் கலந்து கொள்ள அங்கு ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த சிலர் வீரசாவர்க்கர் உருவம் அச்சிடப்பட்ட பேனரை அகற்ற முயன்றனர். இதனால் மேலும் பதற்றம் ஏற்பட்டது. வன்முறை ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதையடுத்து அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நிலைமையை சீரமைத்தனர்.

பின்னர் சிவமொக்கா டவுனுக்கு 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவை தாசில்தார் நாகராஜ் பிறப்பித்தார். இந்த தடை உத்தரவு நேற்று மதியம் 3 மணிக்கே அமலுக்கு வந்தது. இதையடுத்து நேரு சாலை உள்பட பல்வேறு சாலைகளில் கடைகள் மூடப்பட்டன. மேலும் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே சிவமொக்கா டவுன் பகுதியை சேர்ந்த பிரேம் சிங், அசோக் நகர் பகுதியை சேர்ந்த பிரவீன் (வயது 27) ஆகிய 2 பேரையும் மர்மநபர்கள் கத்தியால் குத்தினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்