மாணவிகள் பலாத்கார வழக்கு: முருக மடாதிபதி போலீஸ் முன் விசாரணைக்கு ஆஜர்

மாணவிகள் பலாத்கார வழக்கில் முருக மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, சித்ரதுர்கா போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என்று பேட்டி அளித்தார்.

Update: 2022-08-29 17:03 GMT

சித்ரதுர்கா:

மாணவிகள் பலாத்காரம்

கர்நாடகத்தில் பிரபல மடங்களில் ஒன்று சித்ரதுர்காவில் இருக்கும் முருக மடம். இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இந்த மடத்தின் சார்பில் தங்கும் விடுதியுடன் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மடத்தின் பள்ளியில் தங்கி படித்து வந்த 15 மற்றும் 16 வயது 2 மாணவிகள் 2 பேரை மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு, கடந்த 1½ ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த புகாரின் பேரில் மைசூர் நஜர்பாத் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அக்கமாதேவி, வார்டன் ரஷ்மி, பசவநித்யா, பரமசிவய்யா, வக்கீல் கங்காதரய்யா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது நடவடிக்கை?

இந்த நிலையில் இந்த பாலியல் வழக்கு சித்ரதுர்கா போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக சித்ரதுர்கா போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்காக தனிப்படை போலீசார் அவரை தேடியபோது, ஐதராபாத்திற்கு தப்பியோடிவிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரது செல்போன் சிக்னல் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டறியும்ம பணியில் ஈடுபட்டனர். அதில் அவர் சித்ரதுர்காவில் உள்ள மடத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மடத்திற்கு சென்று போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது அவர் அங்கு இல்லை என்று தெரியவந்தது. ஹாவேரி மாவட்டத்திற்கு தப்பி செல்வதாக கூறப்பட்டது. இதையடுத்து அவரது வாகனத்தை போலீசார் பின்தொடர்ந்து சென்று கைது செய்யபோவதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் மற்றும் போலீசார் வாகனத்தில் அழைத்து வருவதற்கான எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை.

போலீசில் ஆஜர்

இதற்கிடையில் தப்பியோடியதாக கூறப்பட்ட சிவமூர்த்தி முருக சரணரு சித்ரதுர்காவில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணைக்கு ஆஜராகி தன் மீத பாலியல் வழக்கு குறித்து போலீசாரிடம் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்யாமல் மேலும் தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டனர்.

குற்றமற்றவனாக...

இந்த நிலையில் சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யபோவதாக தகவல் வெளியானதும் ஏராளமான பக்தர்கள் போலீஸ் நிலையம் மற்றும் மடத்தின் முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் கைது செய்யவில்லை என்றதும், போராட்டத்தை கைவிட்டு அமைதி ஆகினர். இதைதொடர்ந்து போலீஸ் விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வெளியே வந்த சிவமூர்த்தி முருக சரணரு நிருபர்களிடம் கூறியதாவது:-

இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் என் மீது எழுவது முதல்முறையில்லை. 15 ஆண்டுகளாக இதேபோல் பல்வேறு வழக்கு, பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன். இதனால் பொதுமக்கள், எனது பக்தர்கள் ஆதங்கம் அடைய தேவையில்லை. உங்களைவிட நான் தைரியமாக இருக்கிறேன். சட்டம், ஒழுங்கை அனைவரும் முறையாக மதிக்கவேண்டும். என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் வதந்தி தான். இந்த வதந்தியை யாரும் நம்பவேண்டாம். இதை ஒரு கெட்ட நேரமாக கருதுகிறேன். விரைவில் இந்த வழக்கில் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபித்து வெளியே வருவேன். அதனால்போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பேன். நான் எங்கும் தப்பி செல்ல முயற்சிக்கவில்லை. நேர்மையுடன் போலீஸ் விசாரணையை எதிர்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


மடாதிபதி முன்ஜாமீன் கேட்டு மனு

முருக மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் உள்பட 5 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து சித்ரதுர்கா போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் பாலியல் வழக்கில் மடாதிபதி கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முன்ஜாமீன் கேட்டு அவரது தரப்பு வக்கீல், சித்ரதுர்கா செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்ற கோர்ட்டு முன்ஜாமீன் மீதான மனுவை வருகிற 1-ந்தேதி விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்