பெங்களூருவை சர்வதேச தரத்தில் உயர்த்த நடவடிக்கை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
பெங்களூருவை சர்வதேச தரத்தில் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.;
பெங்களூரு:
பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே கங்காநகரில் நடைபெற்ற கெம்பேகவுடாவின் 513-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
ரூ.6 ஆயிரம் கோடியில் வளர்ச்சி பணிகள்
பெங்களூரு சமமான வளர்ச்சி அடைய எனது தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது. தற்போது பெங்களூரு நகரில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி பணிகளும் நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் சாக்கடை கால்வாய்களை சீரமைக்க ரூ.1,600 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியால் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
பெங்களூருவில் ரிங் ரோடு அமைக்கும் திட்டத்திற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள்ளேயே அந்த பணிகள் தொடங்கி நடைபெற உள்ளது. பெங்களூருவில் மெட்ரோ ரெயில் திட்டம் பல பகுதிகளுக்கு தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. பெங்களூரு நகருக்கு அழகை சேர்க்கும் விதமாக ஏரிகளை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பெங்களூருவில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தரத்தில் உயர்த்த நடவடிக்கை
இதற்கு முன்பு கர்நாடகத்தை ஆட்சி செய்த அரசுகள் சரியான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளாத காரணத்தால், பல்வேறு பிரச்சினைகளை தற்போது சந்திக்க நேரிடுகிறது. அதனால் தான் சாக்கடை கால்வாய் சீரமைப்பு, சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பெங்களூரு நகரவாசிகளுக்கு சுத்தமான குடிநீர், சாலை அமைத்து கொடுப்பது அரசுக்கு சவாலாக உள்ளது. தற்போது பெங்களூருவுக்கு காவிரி 5-ம் கட்ட குடிநீர் வழங்க திட்டம் நடந்து வருகிறது.
அரசின் முன் இருக்கும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு, தற்போது இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். பெங்களூருவை சர்வதேச தரத்தில் உயர்த்த வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.