கட்சி மாறி வாக்களித்த சீனிவாச கவுடா எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய வேண்டும்; குமாரசாமி வலியுறுத்தல்
மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த சீனிவாச கவுடா எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அவமதித்துவிட்டார்
மாநிலங்களவை தேர்தலில் எங்கள் கட்சியை சேர்ந்த சீனிவாசகவுடா எம்.எல்.ஏ. காங்கிரசுக்கு வாக்களித்துள்ளார். அவருக்கு ஏதாவது மரியாதை இருந்தால் உடனே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்ய வேண்டும். கோலார் தொகுதி மக்கள் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சி தொண்டர்களை அவர் அவமதித்துவிட்டார். கொறடா உத்தரவை அவர் மீறியுள்ளார். ஆனால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. கட்சி தாவல்களை கட்சி தாவல் தடை சட்டம் தடுக்கவில்லை.
ஜனநாயகத்தை காப்பதாக கூறி வாக்காளர்களை காங்கிரசார் சந்திக்கிறார்கள். ஆனால் பிற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை சித்தராமையா உள்ளிட்ட காங்கிரசார் கடத்துகிறார்கள். இதன் மூலம் காங்கிரஸ் தலைவர்கள் தரம் தாழ்ந்து அரசியல் செய்கிறார்கள். சீனிவாச கவுடாவின் ஓட்டு காங்கிரசின் வெற்றிக்கு உதவுமா?. அதே போல் குப்பி தொகுதியை சேர்ந்த எங்கள் கட்சி எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சீனிவாஸ் ஓட்டு போட்டுள்ளார். அவர் எவ்வாறு ஓட்டு போட்டார் என்பது விரைவிலேயே தெரிந்துவிடும்.
காலி வாக்குச்சீட்டு
இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலை இந்த எம்.எல்.ஏ.க்கள் செய்கிறார்கள். அவர்கள் எம்.எல்.ஏ.க்களா?. அவர் காலி வாக்குச்சீட்டை பெட்டியில் போட்டுள்ளார். அவர் யாருக்கும் வாக்களிக்கவில்லை. ஆனால் ஊடகங்கள் முன் வந்து, ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு வாக்களித்ததாக கூறியுள்ளார்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
வாக்களித்த பிறகு சீனிவாச கவுடா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, "நான் காங்கிரசுக்கு வாக்களித்தேன். நான் அக்கட்சியை நேசிக்கிறேன். எனது அரசியல் எதிர்காலம் காங்கிரசுடன் தான் உள்ளது. முன்பு நான் காங்கிரசில் இருந்தபோது மந்திரியாகவும் பணியாற்றினேன்" என்றார். இன்னொரு எம்.எல்.ஏ.வான எஸ்.ஆர்.சீனிவாஸ் கூறுகையில், "நான் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு தான் ஓட்டு போட்டுள்ளேன். நான் காலி வாக்குச்சீட்டு போட்டதாக கூறுவது தவறானது. தேர்தல் முடிவு வரும்போது இது தெரியவரும்" என்றார்.