காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு;சித்தராமையா பேச்சு

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை ஏற்போம் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

Update: 2022-06-12 15:00 GMT

பெங்களூரு:

நமக்கு கிடைத்திருக்காது

போவி சமுதாய மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

இந்தியா பல்வேறு சாதி-மதங்களை கொண்ட நாடு. பிற நாடுகளில் இருந்து இந்தியா வேறுபட்டது. அம்பேத்கர் பிற நாடுகளின் அரசியல் சாசனங்களை ஆழமாக ஆராய்ந்து பார்த்து நமக்கு அரசியல் சாசனத்தை உருவாக்கி தந்துள்ளார். ஒருவேளை அம்பேத்கர் தவிர வேறு யாராவது அரசியல் சாசனத்தை உருவாக்கி இருந்தால் இத்தகைய அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு கிடைத்திருக்காது.

பாடப்புத்தகங்களில் அரசியல் சாசன சிற்பி என்று கூறப்பட்டு இருந்தது. அந்த சிற்பி என்ற வார்த்தையை பாடநூல் குழு தலைவராக இருந்த ரோகித் சக்ரதீர்த்த நீக்கியுள்ளார். இது அநீதி இல்லையா?. ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்தவர்கள் என்பதை நாம் புத்தகங்களில் படித்துள்ளோம். இந்த உண்மையை கூறியதால் நான் இந்து விரோதி என்று சொல்கிறார்கள்.

எதிர்ப்பு கிளம்பியது

உண்மையை எப்போதும் உரத்த குரலில் கூற வேண்டும். நாட்டிலேயே முதல் முறையாக நால்வடி கிருஷ்ணராஜ உடையார் 1917-ம் ஆண்டு மில்லியர் ஆணையத்தை அமைத்து பிராமணர் அல்லாதோருக்கு இட ஒதுக்கீடு வழங்கினார். அப்போது இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, போவி சமுதாயத்திற்கு தனி வாரியம் அமைத்து கொடுத்தேன். நிலம் ஒதுக்கீடு செய்தேன்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயங்களுக்கு வெறும் வாக்குரிமை இருந்தால் மட்டும் போதாது. சமூக, பொருளாதார, கல்வி சுதந்திரம் தேவை. ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப்பணிகளுக்கு இந்த அரசு ரூ.42 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால் ரூ.28 ஆயிரத்து 700 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்தேன்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு

அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி, அதிகாரம், வளங்கள் சம அளவில் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். அப்போது தான் மாற்றம் ஏற்படும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது ரூ.162 கோடி செலவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தினேன். அந்த அறிக்கை தயாராக இருக்கிறது. ஆனால் அதை அரசு இதுவரை ஏற்கவில்லை.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அந்த அறிக்கையை ஏற்று அதன்படி திட்டங்களை செயல்படுத்துவோம். சமூகநீதி நிறைவேற்றப்பட்டு உள்ளதா என்பது குறித்து இத்தகைய மாநாடுகள் மூலம் விவாதிக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்