வாலிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரம் 'அபேஸ்'

ஆன்லைனில் கடன் கேட்டு விண்ணப்பித்த வாலிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-07-26 17:23 GMT

ஹாசன்:

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிபுரா தாலுகா ஹலேகோடே பெட்டதசாதேனஹள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் ஆன்லைன் மூலம் கடன் பெறுவதற்கு விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் மர்ம நபர் ஒருவர் இவரது செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பினார். அதில் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கடன் தொகையை பெற்று கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் இதற்காக ஒரு இணையதள 'லிங்க்' அனுப்பப்பட்டுள்ளது. அதன் மூலம் உடனே கடன் தொகை உங்கள் வங்கி கணக்கிற்கு வந்துவிடும் என்று கூறியிருந்தது. இதை நம்பிய சந்தோஷ் அந்த 'லிங்க்'கை கிளிக் செய்தார். பின்னர் அதில் கேட்கப்பட்ட தகவல்களை பதிவிட்டார். அப்போது அவருக்கு மீண்டும் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் உடனே ஹாசன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடி நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்