பெங்களூருவில் ஆள்மாறாட்டத்தில் பெண்ணின் கையை வெட்டிய ரவுடி கைது

பெங்களூருவில் ஆள்மாறாட்டத்தில் பெண்ணின் கையை வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-20 18:45 GMT

பெங்களூரு:

ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் அபி என்கிற அமுல் (வயது 24). இவர் பெங்களூரு சுப்பிரமணியநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறார். இவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ளன. இந்த நிலையில் அபி மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராகேஷ் என்பவர் இடையே பெண் விவகாரத்தில் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் அவர்கள் இடையே அடிக்கடி ேமாதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி அபி, ராகேசின் வீட்டிற்கு சென்றார்.

அப்போது ராகேஷ் வீட்டின் அருகே உள்ள வீட்டின் கதவை ஆக்ரோஷமாக தட்டினார். இதையடுத்து கதவை திறந்து கொண்டு பெண் ஒருவர் வெளியே வந்தார். அந்த சமயத்தில் அபி, தான் வைத்திருந்த கத்தியை கொண்டு அந்த பெண்ணை தாக்கினார். இதில் அந்த பெண்ணின் கை வெட்டப்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் வலி தாங்க முடியாமல் அந்த பெண் கத்தி கூச்சலிட்டார்.

இதையடுத்து அபி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து சுப்பிரமணியநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் பெண் விவகாரத்தில் அபி மற்றும் ராகேஷ் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டதும், அதுதொடர்பாக தகராறு செய்வதற்கு சென்றபோது வாடகைக்கு வசித்த பெண்ணின் கையை அபி வெட்டியதும் தெரிந்தது. அதாவது, ஆள்மாறாட்டத்தில் ராகேசுக்கு பதிலாக பெண்ணை அபி வெட்டியது தெரியவந்தது.

இந்த நிலையில் சுப்பிரமணிய நகர் போலீசார் தலைமறைவாக இருந்து வந்த ரவுடி அபியை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்