ஜதராபாத்திற்கு தப்ப முயன்ற கொள்ளையன் கைது
பெங்களூருவில் துப்பாக்கியால் சுட்டு ஒரு கிலோ தங்கத்தை கொள்ளையடித்த வழக்கில் விமானத்தில் ஐதராபாத்துக்கு தப்பி செல்ல முயன்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
பெங்களூரு:-
துப்பாக்கியால் சுட்டு கொள்ளை
பெங்களூரு பேடரஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பைப் லைன் ரோட்டில் மனோஜ் லோகர் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. அந்த நகைக்கடைக்கு நேற்று முன்தினம் காலையில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 கொள்ளையர்கள், தங்க நகைகள் வாங்குவது போல் நடித்தனர். பின்னர் மனோஜை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, கடையில் இருந்த ஒரு கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்றிருந்தார்கள்.
தொடை பகுதியில் குண்டு காயம் அடைந்த மனோஜுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மேற்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் உத்தரவின் பேரில் மேற்குமண்டல துணை கமிஷனர் ஹரீஷ் மேற்பார்வையில் தனிப்படைகளும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்துக்கு தப்ப முயற்சி
இந்த நிலையில், தனிப்படை போலீசார், மனோஜ் கடையில் உள்ள கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலமாக கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.கடைக்குள் கொள்ளையர்கள் புகுவது, மனோஜை மிரட்டுவது மற்றும் கொள்ளையர்களின் உருவம் அந்த காட்சிகளில் பதிவாகி உள்ளது. அதன்மூலம் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில், நகைக்கடை கொள்ளை வழக்கில் கொள்ளையன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில், அவரது பெயர் உசேன் என்பது தெரிந்தது. இவரது கூட்டாளிகள் பெயர் சிகந்தர், சிவா மற்றும் விகாஷ் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் 3 பேரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். உசேனிடம் இருந்து குறைந்த அளவே தங்கம் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர், பெங்களூருவில் இருந்து ஐதராபாத்திற்கு சென்று பதுங்கி இருக்கவும், இதற்காக விமானத்தில் ஐதராபாத்துக்கு தப்பி செல்ல முயன்றதும் தெரியவந்துள்ளது. ஏனெனில் உசேனின் சொந்த ஊர் ஐதராபாத் என்பதும் தெரியவந்துள்ளது.
3 பேரை பிடிக்க தீவிரம்
இவர்கள் 4 பேரும் சிறு, சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். சிறையில் வைத்து தான் உசேனுடன் மற்ற 3 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் 4 பேரும் சேர்ந்து மனோஜ் கடையில் தங்க நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி நேற்றுமுன்தினம் கொள்ளையை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மற்ற 3 பேரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். கூடிய விரைவில் கொள்ளையர்கள் சிக்குவார்கள் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.