ராமநகர் மாவட்டத்தை யாராலும் பிரிக்க முடியாது-குமாரசாமி எச்சரிக்கை
ராமநகர் மாவட்டத்தை யாராலும் பிரிக்க முடியாது என்று குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு:-
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கிளர்ந்து எழுவார்கள்
கனகபுராவை பெங்களூருவில் சேர்ப்பதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். இந்த ஜென்மம் மட்டுமல்ல, இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும், ராமநகர் மாவட்டத்தை யாராலும் பிரிக்க முடியாது. இதை டி.கே.சிவக்குமார் புரிந்துகொள்ள வேண்டும். மக்களின் நலன் குறித்து ஆலோசித்த பிறகே ராமநகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
அதனால் கனகபுராவை பெங்களூருவில் சேர்த்தால் ராமநகர் மக்கள் கிளர்ந்து எழுவார்கள். சட்டவிரோதமாக செயல்பட்டு கண்டவர்களின் நிலத்திற்கு வேலி போடுவது, கொள்ளையடிப்பது போன்ற செயல்கள் எனக்கு தெரியாது. அது தெரிய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. கனகபுராவில் உள்ள நிலத்தை கொள்ளையடித்து கட்டுமான தொழில் செய்வோருக்கு வழங்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் நினைக்கிறார்.
எதையும் செய்யவில்லை
புதிய மாவட்டங்களை உருவாக்கும்போது மக்களின் நலன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படுகிறது. கனகபுராவை பெங்களூருவில் சேர்ப்பதன் பின்னணியில் யாருடைய நலன் உள்ளது?. கனகபுரா மக்களுக்கு உண்மை என்னவென்று நன்றாக தெரியும். தேவேகவுடா மந்திரியாக இருந்தபோது, கனகபுராவின் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினார்.
டி.கே.சிவக்குமார் என்ன செய்தார்?. ஏழைகளின் நிலத்திற்கு வேலி போடுவது, கொள்ளையடிப்பது, குறுக்கே வருகிறவர்களை தாக்குவது போன்றவற்றை தான் அவர் செய்தார். இந்த பகுதியின் வளா்ச்சிக்கு அவர் எதையும் செய்யவில்லை. இதை கனகபுரா மக்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.